விபத்தில் சிக்கிய காரிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட யானை தந்தங்கள், மான் கொம்பு

விபத்தில் சிக்கிய காரிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட யானை தந்தங்கள், மான் கொம்பு
விபத்தில் சிக்கிய காரிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட யானை தந்தங்கள், மான் கொம்பு

சென்னை எழும்பூர் பகுதியில் நடந்த விபத்தொன்றில், சேதமடைந்த கார் ஒன்றை சோதனை செய்தபோது அதில் யானை தந்தங்கள், மான் கொம்பு சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை எழும்பூர் காசா மேஜர் சாலையில் நேற்று இரவு அதிவேகமாக கட்டுப்பாடின்றி வந்த காரொன்று, எதிரில் வந்த மற்றொரு கார், ஆட்டோ, இருசக்கர வாகனம் என மொத்தம் 5 வாகனங்களின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் எதிரில் காரை ஓட்டி வந்த எழும்பூரைச் சேர்ந்த வில்சன், ஆட்டோ ஓட்டுநர் மற்றும் இருசக்கர வாகன ஓட்டுநர் காயமடைந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநரான ராதாகிருஷ்ணன் (56) என்பவரை விசாரித்தபோது, அவர் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் என்பதும் அதிக அளவில் குடித்துவிட்டு வாகனத்தை செலுத்தியதுமே விபத்திற்கு காரணம் எனத் தெரியவந்தது.

இந்த விபத்து தொடர்பாக அண்ணாசதுக்கம் போக்குவரத்துப் புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து குடிபோதையில் கார் ஓட்டி வந்த வழக்கறிஞரான ராதாகிருஷ்ணனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தின் சி.சி.டி.வி காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி காட்சியை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

இந்நிலையில் இந்த விபத்தில் சிக்கிய எதிரில் வந்த Nano காரின் (வில்சன் என்பவருக்கு சொந்தமான கார்) முன்பகுதி முற்றிலும் சேதமடைந்திருந்தது. அந்த வாகனத்தில் வேறு ஏதேனும் சேதம் இருக்கிறதா என அறிய, போக்குவரத்து போலீசார் அதில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த காரில் பை ஒன்றில் 6 யானைத் தந்தங்கள், மான்கொம்பு, கைத்தடி உள்ளிட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. அதிர்ச்சியடைந்த போக்குவரத்து போலீசார் அதை கைப்பற்றி எழும்பூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக எழும்பூர் போலீசார் வில்சனிடம் விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில் ஆப்ரிக்காவில் உள்ள தனது உறவினர்கள் அன்பளிப்பாக இவற்றைக் கொடுத்ததாகவும் அதனை காரில் வைத்திருந்ததாகவும் வில்சன் தெரிவித்ததாக போலீசார் கூறியுள்ளனர். ஆனால் யானை தந்தங்கள், மான்கொம்பு இந்தியாவில் வைத்திருக்க கூடாது. என்பதால் வேளச்சேரியில் உள்ள வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து வனத்துறை அதிகாரிகளும் எழும்பூர் காவல் நிலையம் வந்தனர். அவர்களிடம் அனைத்தும் ஒப்படைக்கப்பட்டது. வனத்துறை அதிகாரிகள் வில்சனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com