தேர்தல் நேர ‘கொடுக்கல் வாங்கல்’ பகை - ஒருவர் அடித்துக்கொலை..!
உசிலம்பட்டி அருகே உள்ளாட்சி தேர்தலின்போது வாபஸ் பெறுவதற்கு பணம் கொடுத்த விவகாரத்தில் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள உத்தப்புரம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கான உள்ளாட்சி தேர்தல் கடந்த டிசம்பர் 30-ஆம் தேதி நடைபெற்றது. இதில் உத்தப்புரத்தைச் சேர்ந்த முத்தையா என்பவரும், அதே ஊரைச் சேர்ந்த பால்ராஜ் என்பவரும் ஒரே ஊரில் போட்டியிட்டதாக தெரிகிறது. ஆனால் முத்தையாவை வாபஸ் பெறுமாறு கூறி ரூ.15 ஆயிரத்தை பால்ராஜ் கொடுத்த நிலையில், வாபஸ் பெறும் தேதி முடிந்துவிட்டதாக முத்தையா தெரிவித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் பால்ராஜுக்கு ஆதரவளிக்குமாறு மக்களை கேட்டுக் கொண்டு, பின்னர் தேர்தல் பணிகளில் முத்தையா ஈடுபடவில்லை என சொல்லப்படுகிறது.
இதையடுத்து தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மேலப்பட்டியைச் சேர்ந்த முருகன் என்பவர் வெற்றி பெற்றார். இதனால் தோல்வியடைந்த பால்ராஜ், முத்தையாவிடம் தான் கொடுத்த ரூ.15 ஆயிரத்தை திருப்பி கொடுக்குமாறு கேட்டு, அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்திருக்கிறார். இந்நிலையில் இன்று முத்தையாவின் வீட்டிற்கு தனது ஆதரவாளர்களுடன் சென்ற பால்ராஜ், பணத்தை திருப்பி கேட்டு தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.
தகராறு முற்றிய நிலையில் முத்தையாவை கடுமையாக தாக்கியதுடன், அவரது டிராக்டர் மற்றும் இருசக்கர வாகனத்திற்கு தீ வைத்து விட்டு பால்ராஜும் அவரது ஆதரவாளர்களும் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. படுகாயமடைந்த முத்தையா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு வந்த எழுமலை போலீசார் முத்தையாவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து பால்ராஜ் மற்றும் அவரது ஆதரவாளர்களை தேடி வருகின்றனர்.