பள்ளி மாணவியை கர்ப்பமாக்கி கருக்கலைப்பு: சித்தப்பா உட்பட 8 பேர் போக்சோவில் கைது
அஞ்செட்டி அருகே பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் மாணவியின் சித்தப்பா உட்பட 8 பேரை தேன்கனிக்கோட்டை மகளிர் போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே உள்ள தக்கட்டி ஊராட்சி பேடரள்ளி கிராமத்தில் வசிக்கும் மாதப்பன் என்பவரின் மகன் கேசவன் (21). அதே ஊரைச் சேர்ந்த 17வயது மாணவி அரசுப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்துள்ளார். இந்த மாணவிக்கு சித்தப்பா உறவுமுறையான கேசவன், மாணவியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது,
இந்நிலையில் கேசவன் கடந்த டிசம்பரில் திருமணம் செய்து கொள்வதாகக்கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதில் கர்ப்பமுற்ற மாணவியை, கடந்த மே மாதம் கர்ப்பத்தை கலைக்க வைத்துள்ளார் கேசவன். இதை அறிந்த மாணவியின் பெற்றோர் கேசவனின் பெற்றோரிடம் முறையிட்டுள்ளனர். அதில் தகராறு ஏற்பட்டு மாணவியின் பெற்றோரை கேசவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மிரட்டி தாக்கியுள்ளனார்.
இதையடுத்து மாணவி, தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் ஆய்வாளர் சம்பூர்ணம் மாணவியை கர்ப்பமாக்கிய கேசவன், அவரது தந்தை மாதப்பன் , உறவினர்கள் வாசன் (22), பச்சமுத்து (25), கிருஷ்ணன் (30), அழகேசன் (28), பச்சப்பன் (32), ஆனந்தன் (28) ஆகிய 8 பேரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர், பின்னர் தேன்கனிக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிருஷ்ணகிரி சிறையில் அடைத்தனர்.