வெளிநாட்டிற்கு தப்பிச்சென்ற நீரவ் மோடிக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் அமலாக்கத்துறை எதிர்பார்க்காத அளவுக்கு கோடிக்கணக்கான மதிப்புள்ள பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. அவை அனைத்தையும் அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது.
வைர கடிகாரம்
நீரவ் மோடியின் அபார்ட்மெண்டில் நடத்தப்பட்ட சோதனையில் அமலாக்கத்துறை பறிமுதல் செய்த முதல் பொருள் வைர கடிகாரம். அதன் மதிப்பு ரூ.1.4 கோடி. கடிகாரங்களின் காதலரான நீரவ் மோடி இது போன்ற கடிகாரங்கள் நிறைய வைத்திருந்தார் என்கின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள். அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறும் போது வைர வியாபாரி என்பதால் இது போன்ற பொருட்கள் கிடைப்பது சாதரணமே என்றனர்.
வைர மோதிரம்
பார்த்தாலே அணிந்து கொள்ள தோன்றும் அள்வுக்கு இருக்கிறது அந்த மோதிரம். முழுக்க முழுக்க வைரம் நிறைந்திருக்கிறது. ஜொலிக்கும் வகையில் , பெரிதாக இல்லாமல் மிக அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதன் மதிப்பு ரூ.10 கோடி என்கின்றனர் அதிகாரிகள்
புகழ் பெற்ற ஓவியங்கள்
அமலாக்கத்துறை அதிகாரிகள் நீரவ் மோடியின் அபார்ட்மெண்டில் நுழைந்த போது அவர்களை வரவேற்றது உலக புகழ் பெற்ற ஓவியர்களின் ஓவியங்கள். குறிப்பாக எம்.எப்.ஹுசைன், கே.கே.ஹெப்பர், அம்ரிதா ஷெர்கில் போன்றோரின் ஓவியங்கல் அறை முழுக்க நிறைந்திருந்தது. இந்த ஓவியர்களின் ஓவியங்கள் இயல்பாகவே கோடிகளில் விற்பனை ஆகும். தற்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ள ஓவியங்களின் மதிப்பு சுமார் 10 கோடி.
பழங்கால நகைகள்
பழங்கால நகைகளை அணிந்து கொள்வதும் அவற்றை வைத்து தங்களை உயர்த்திக் காட்டிக் கொள்வதும் பணக்காரர்களின் வாடிக்கையாக இருக்கிறது. நிரவ் மோடியின் வீட்டில் இன்று நடந்த சோதனையிலும் மிக பழமையான நகைகள் கைப்பற்றப்பட்டிருக்கிறது. அதன் மதிப்பு 15 கோடி.
இது தொடர்பாக பேசிய அதிகாரிகள், நீரவ் மோடியின் அபார்ட்மெண்டில் தாங்கள் பார்த்த ஒவ்வொரு பொருளிலும் வைரத்தை பயன்படுத்தி அழகுபடுத்தப்பட்டிருப்பதை காண முடிந்தது என்கின்றனர். முழுவதும் வைரத்தால் ஆன பொருட்கள் அனைத்தையும் பறிமுதல் செய்ததாகவும் , இது போன்று தாங்கள் மேற்கொண்ட சோதனையில் இவ்வளவு வைர பொருட்களையோ, புகழ் பெற்ற ஓவியங்களையோ கண்டதில்லை என்றும் தெரிவித்தனர்.
பின்னணி
பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளை ஒன்றில் ரூ.11,500 கோடி அளவுக்கு மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 10 ஊழியர்கள் சஸ்பெண்ட் செட்டப்பட்டுள்ளனர்.இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய அரசு வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி, பங்குச் சந்தைக்கு (பிஎஸ்இ) அனுப்பியுள்ள அறிக்கையில் ரூ.11000 கோடி முறைகேடு நடந்ததாக தெரிவித்துள்ளது.
இந்த மோசடி வழக்கில் பிரபல நகைக் கடை அதிபர் நிரவ் மோடிக்கு எதிராக இரு புகார்கள் எழுந்துள்ளன. இந்த முறைகேடுகள் கடன் பொறுப்பேற்பு ஆவணங்கள் மூலம் நடைபெற்றுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இதில் பொதுத்துறை வங்கிகள் 2 மற்றும் 1 தனியார் வங்கிக்கு தொடர்பிருக்கலாம் என்றும் தெரிகிறது.
மோசடி செய்ததாக தேடப்படும் நீரவ் மோடி, வெளிநாடு தப்பிச் சென்றுவிட்டார். பண மோசடி வழக்கில் இருந்து தப்ப, விஜய் மல்லையா, லலித் மோடி வரிசையில் நீரவ் மோடியும் வெளிநாடு தப்பி விட்டதை புலனாய்வு அமைப்புகள் உறுதி செய்துள்ளன.
பஞ்சாப் நேஷனல் வங்கி மட்டுமின்றி அலகாபாத் வங்கி, ஆக்சிஸ் வங்கி, கனரா வங்கி ஆகியவற்றிலும் நூதன வழியில் புரிந்துணர்வு கடிதத்தை மோசடியாக பயன்படுத்தி நீரவ் கடன் பெற்றிருக்கக் கூடும் என சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினர் சந்தேகிக்கின்றனர். இந்த விவகாரத்தில் வங்கி அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர்கள் உத்தரவாதத்தைப் பெற தவறி விட்டதாகவும் சிபிஐ தரப்பில் புகார் கூறப்படுகிறது.