சென்னை: ஐபிஎல் மோகத்தால் இன்ஸ்டாகிராம் மோசடியில் சிக்கி ரூ.90,000-ஐ இழந்த நபர்!
“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!
IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew
சென்னை திருவல்லிக்கேணி டி.பி.கோயில் தெருவை சேர்ந்தவர் அருண் குமார். இவர் ராயப்பேட்டையில் கௌடியா மடம் சாலையில் சி.ஏ. உள்ளிட்ட படிப்புகளுக்கான பயிற்சி நிறுவனம் நடத்தி வருகிறார். இந்தநிலையில், இந்நிறுவனத்தில் படிக்கும் மாணவ/மாணவிகள் ஐ.பி.எல். போட்டி பார்க்க விரும்பி உள்ளனர்.
மே.6-ஆம் தேதியன்று, சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிக்களுக்கான போட்டிக்கான டிக்கெட்டை ஆன்லைன் மூலமாக அருண் குமார் புக் செய்ய முயற்சித்துள்ளார். ஆன்லைனில் கிடைக்காததால், நேரடியாக சென்றுள்ளார். ஆனால் அப்போதும் கூட்டம் காரணமாக அவரால் டிக்கெட் பெறமுடியாமல் போயுள்ளது. மாணவர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற எண்ணிய அவர், கள்ளசந்தையில் விற்பனை செய்வோர் மூலமாக டிக்கெட் வாங்க முயன்றுள்ளார்.
அப்போது, இன்ஸ்டாகிராம் மூலம் IPL 2023 என்ற பக்கத்தில் டிக்கெட் விற்பனைக்கு இருப்பதை பார்த்த அருண், அந்த பக்கத்தை தொடர்பு கொண்ட போது வினோத் யாதவ் என்பவர் பேசியுள்ளார். வினோத் யாதவ், அருணிடம் தன்னிடம் ஐபிஎல் டிக்கெட் இருக்கிறது என்றும் அப்பர் டிக்கெட் 3,500 ரூபாய் என்றும், லோயர் டிக்கெட் 4,500 என்றும் கூறி இன்ஸ்டா ஆடியோ கால் மூலம் பேசியுள்ளார். பணத்தை வங்கி கணக்கில் செலுத்தினால் இ டிக்கெட் அனுப்பி வைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனை நம்பி அருண் குமார் ‘எனக்கு 20 டிக்கெட்டுகள் வேண்டும்’ என்று கூறியுள்ளார். வினோத் யாவும், “ஒரு டிக்கெட் விலை 4,500 ரூபாய்; 20 டிக்கெட்டுக்கு 90,000 ரூபாய் வரும்” என்று கூறியுள்ளார். ஐ.பி.எல். போட்டியை தனது மாணவர்களோடு பார்க்கவேண்டும் என்ற ஆசையில், ரூ.90 ஆயிரம் பணத்தை தனது வங்கி கணக்கில் இருந்து 4 தவணையாக அருண்குமார் வினோத் யாதவ்விற்கு அனுப்பி உள்ளார். அனுப்பியவுடன், “மேலும் 5 டிக்கெட்களுக்கு பணம் அனுப்பினால் சேர்த்து டிக்கெட் அனுப்கிறேன்” என வினோத் யாதவ் தெரிவித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த அருண், ‘கொடுத்தவரை டிக்கெட் கொடுங்கள்’ என்று கூறியுள்ளார்.
ஆனால், ஐபிஎல் டிக்கெட் கொடுக்காமல் வினோத் யாதவ் ஏமாற்றி உள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த அருண் குமார் பணத்தை திருப்பிக்கேட்டுள்ளார். பணத்தை தர முடியாது என்று வினோத் யாதவ் கூறிவிட்டு, இன்ஸ்டாகிராமில் இருந்து வெளியேறி விட்டு அழைப்பை துண்டித்து விட்டார். இதனையடுத்து, ராயப்பேட்டை காவல் நிலையத்தில் அருண் குமார் புகார் செய்தார். அதன்பேரில் காவல்துறை வழக்குப் பதிவு செய்து, சைபர் கிரைம் குற்றப்பிரிவுக்கு மாற்றினார்கள். தொடர்ந்து தற்போது சைபர் கிரைம் காவல்துறை இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆன்லைன் மற்றும் நேரடியாக சென்று டிக்கெட் வாங்க முயன்று கிடைக்காததால் வேறு வழியின்றி இது போன்று சிக்கி கொண்டதாகவும், டிக்கெட் விற்பனையை முறைப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார் அருண் குமார். மேலும் யாரும் இது போன்று சமூக வலைத்தளங்களில் விற்பனை செய்யப்படுவதை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் போட்டி தொடங்கியதிலிருந்து கள்ளச் சந்தையில் டிக்கெட் விற்பனை, டிக்கெட் வாங்கி தருவதாக மோசடி என பல மோசடி சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக, கள்ளச்சந்தையில் 2 ஆயிரம் மதிப்புள்ள டிக்கெட்கள் 4,000 ரூபாயில் இருந்து 10 - 12 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. எப்படியாவது போட்டியை பார்த்து விட வேண்டும் என்ற ஆசை மக்களின் கண்ணை மறைத்து விடுகிறது. இதனால் கள்ளச்சந்தை விற்பனை களைக்கட்டியுள்ளது.
இதுவரை கள்ள சந்தையில் டிக்கெட் விற்பனை செய்ததாக மொத்தம் 46 நபர்கள் கைது செய்யப்பட்டு 98 டிக்கெட்டுகள் மற்றும் 1.52 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அரசியல் பிரமுகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் வரை இந்த போட்டிகளை கண்டு பிரபலப்படுத்துவதால் தாங்களும் பார்க்கவேண்டும் என்ற ஆசையில் இதுபோன்ற மோசடி வலையில் பொதுமக்கள் சிக்குகிறார்கள் என்று காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இதனால் கிரிக்கெட் மைதான நிர்வாகத்திடம் ‘ஆன்லைன் மூலம் டிக்கெட் விற்பனை செய்யவும்’ என கேட்டு கொண்டுள்ளதாக காவல்துறை சார்பில் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.