குடிபோதையில் தனது ஒரு வயது குழந்தையை கால்வாயில் வீசிய அப்பாவை போலீசார் கைது செய்துள்ளனர்.
தெற்கு டெல்லி அருகே உள்ளது ஜமியா நகர். இந்தப் பகுதியை சேர்ந்தவர் ரஷித் ஜமால். இவர் மனைவி மொபிடா பேகம். ஜமாலுக்கு குடிப்பழக்கம் உண்டு. அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்வார். கடந்த செவ்வாய்க்கிழமையும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது இவர்களது ஒரு வயது குழந்தை இடைவிடாமல் அழுதுகொண்டிருந்தது. சண்டையை சமாளிப்பதற்காக, அவரது உறவினர்களை அழைக்கப் போனார் பேகம்.
அதற்குள் குழந்தையை தூக்கிய ஜமால், கோபத்தில் தூரத்தில் இருந்த கால்வாயில் வீசிவிட்டார். இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் குடிகார ஜமாலை அடித்து உதைத்தனர். குழந்தையை தேடினர். கிடைக்கவில்லை. போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் குடிகார ஜமாலை கைது செய்தனர். குழந்தையை இன்னும் தேடி வருகின்றனர்.
போதையில் பெற்ற தகப்பனே குழந்தையை கால்வாயில் வீசிய சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.