வேரில் ஊற்றப்படும் விஷம் : பிரிவினைவாதங்களின் கூடாரமாகின்றனவா கல்விச்சாலைகள்?

அடிப்படைவாதச் சிந்தனையுள்ள பெரும்பான்மைக்கு நடுவே வாழும் மக்களுக்கு இஸ்லாமியத் தனிச்சட்டம் மட்டும் அவர்களுக்கான பாதுகாப்பை வழங்கிவிட முடியுமா? இந்தப் புரிதல் இல்லாமல் அன்பை ரொமாண்டிசைஸ் செய்வதால் எந்தவிதப் பயனும் இல்லை.
பிரிவினைவாதங்களின் கூடாரமாகின்றனவா கல்விச்சாலைகள்
பிரிவினைவாதங்களின் கூடாரமாகின்றனவா கல்விச்சாலைகள்கோப்புப்படம்

உத்தரப்பிரதேச மாநிலம் முசாஃபர்நகரில் நிகழ்ந்ததாக அண்மையில் ஆன்லைனில் ஒரு வன்முறை வீடியோ வெளியானது. அதில் ஒரு பள்ளி ஆசிரியரே சக மாணவரைக் கொண்டு மற்றொரு மாணவரை அடிக்கச் செய்கிறார். ஒரு ஏழு வயது சிறுவனை அதே வயதுடைய மற்றொரு சிறுவன் வகுப்பறையில் பல மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியர் அடிக்கச் சொல்ல கன்னத்தில் அறைகிறான்.

பின்னால் அந்தச் சிறுவனின் மதத்தைக் குறிப்பிட்டு ஆசிரியர் கூறும் கருத்துகள் நமக்குக் கேட்கிறது. இந்த சம்பவம் ஆகஸ்ட் 24 ஆம் தேதி நடந்துள்ளது. அறிவு போதிக்க வேண்டிய ஆசிரியரே வெறுப்பு போதிக்கும்போது நாட்டில் இந்த அறிவியல் கொண்டாட்டங்கள் யாருக்காக என்கிற கேள்வி எழாமல் இல்லை.

சாதனைகளுக்கு ஒன்றிணைந்து உவகை கொள்ளும் நமது கூட்டு மனசாட்சிகளுக்கு இதுபோன்ற வன்முறைகள் மீது மட்டும் ஏன் எப்போதும் கோபம் எழுவதில்லை?

வெளியான வீடியோவை குறித்து பேசிய அந்த ஆசிரியர், “பிள்ளையின் பெற்றோர்தான் அந்தச் சிறுவனிடம் கண்டிப்புடன் இருக்கச் சொன்னார்கள், அதுதான் அதற்கு காரணம். மற்றபடி மதவெறியைத் தூண்டும் வகையில் பேசவில்லை. நான் மாற்றுத் திறனாளி, எழுந்து நடக்கமுடியாது என்பதால் மற்றொரு மாணவனைக் கொண்டு அடிக்கச் சொன்னேன். எங்கள் பகுதியில் அனைவரும் மத நல்லிணக்கத்துடன் வாழ்கின்றனர். ஆனால் நான் பேசிய வீடியோ வன்முறையைத் தூண்டும் வகையில் எடிட் செய்யப்பட்டு திரிக்கப்பட்டிருக்கின்றது. இருப்பினும் 2-3 மாணவர்களை கொண்டு அந்தச் சிறுவனை அடிக்கச் சொன்னது தவறுதான், அதற்கு தான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

பிரிவினைவாதங்களின் கூடாரமாகின்றனவா கல்விச்சாலைகள்
உ.பி. இஸ்லாமிய மாணவரை அடித்த சம்பவம்: “நான் வருத்தப்படவில்லை. ஏனெனில்...”- விளக்கம் கொடுத்த ஆசிரியை

இந்த சம்பவத்துக்கு மத அடையாளம் எதுவுமில்லை. தான் தனது பிள்ளையிடம் கண்டிப்புடன் நடந்துகொள்ளும்படி ஆசிரியரிடம் கூறியது உண்மைதான். ஆனால் இப்படி வன்முறையுடன் நடந்துகொள்ளச் சொல்லவில்லை.

ஆசிரியர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒருபுறம் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆசிரியர் கூறும் எந்தவிதக் காரணமும் நமக்கு ஏற்புடையதாக இல்லை. வெறுப்பரசியலால் நிகழ்த்தப்படும் குழந்தைகள் மீதான வன்முறை என்கிற ஒரு குடையின் கீழ் பார்த்தால் இது ஏதோ அண்மையில் முளைத்தது அல்ல.

மணிப்பூரில் இரு சமூகத்துக்கு இடையே ஏற்பட்ட மோதலில் சாலையில் இழுத்துவரப்பட்டு வன்புணர்வுச் செய்யப்பட்டவர்களில் ஒருவர் 17 வயது சிறுமி.

தமிழ்நாட்டின் நாங்குநேரியில் சாதிவெறுப்பால் சகமாணவனால் அரிவாள் கொண்டு தாக்கப்பட்ட இருவரும் முறையே 17 மற்றும் 14 வயதுடைய பிள்ளைகள்.

நாங்குநேரி
நாங்குநேரிTwitter

அதன் வரிசையில் தற்போது உத்திரப்பிரதேசத்தில் இந்த 7 வயது சிறுவன் மீதான வன்முறை சமூக ஊடக வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. சிறார்கள் மீதான தீவிரவாத வன்முறை மற்றும் துஷ்பிரயோகம் குறித்த ஐ.நா பொதுச்செயலாளரின் அறிக்கையில் இருந்து (UNSG Report on Children and Armed Conflict) இந்தியா நீக்கப்பட்டதாக கடந்த ஜூன் மாதம் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி அறிவித்த நிலையில்தான் இத்தனைச் சம்பவங்களும் அடுத்தடுத்து நிகழ்ந்துள்ளன.

குறிப்பாக பட்டவர்த்தனமாக கல்விச்சாலைகளிலேயே இத்தகைய பிரிவினைவாதங்கள் செயல்படத் தொடங்கியுள்ளன. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் 2021ம் ஆண்டுக்கான அறிக்கையில் உள்ள புள்ளிவிவரங்களின்படி குழந்தைகள் மீது இழைக்கப்படும் குற்றங்கள் அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 4.7 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

up school
up schooltwitter

இத்தனைக்கும் குழந்தைகள் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கும் அவர்கள் மீதான வன்முறையைத் தடுக்கவும் சிறுவர் நீதி (பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் 2015, பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் 2012 என பல்வேறு சட்டங்கள் நடைமுறையில் உள்ளன.

இந்த சட்டங்கள் அமல்படுத்தப்படுவதை உறுதிசெய்ய பல்வேறு மாநில நீதிமன்றங்கள் தனி அமர்வுகளை நடைமுறைக்குக் கொண்டுவந்துள்ளன. ஆனால் அவை எந்த அளவுக்கு ஒடுக்கப்படும் சாதியினருக்கும் மதச் சிறுபான்மையினருக்கும் இனச் சிறுபான்மையினருக்கும் அரவணைப்பு அளிப்பதாக இருக்கிறது?

மதச் சிறுபான்மையினர் என்றாலே நமக்கு மத்திய கிழக்கு நாடுகள்தான் நினைவில் வரும். ஆனால் ஆசியாவில்தான் அதிக எண்ணிக்கையிலான இஸ்லாமிய மக்கள்தொகை உள்ளது. அதிலும் இந்தியாவில் மட்டும் 10 கோடியே 30 லட்சம் பேர் உள்ளனர் என்கிறது அமெரிக்காவின் ஜார்ஜியா பல்கலைக்கழகத்தின் புள்ளிவிவரம்.

இஸ்லாமிய மக்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில் கல்விக்கழகங்கள் எந்த அளவிற்கு மத வேற்றுமைகள் குறித்த உரையாடல்களை முன்னெடுத்திருக்கின்றன? எந்த அளவிற்கு இஸ்லாமியக் குடும்பங்களையும் அதிலிருந்து உருவாகும் மாணவர்களையும் அறிந்துகொள்ள முன்னெடுப்புகளை மேற்கொண்டிருக்கின்றன என்கிற கேள்வியையும் இங்கே முன் வைக்க வேண்டியுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட மாணவனையும் அந்தச் சிறுவனை கண்ணத்தில் அறைந்த மாணவனையும் ஒருவரை ஒருவர் கட்டியணைத்துக் கொள்ளச் சொல்லி அங்குள்ள விவசாய சங்கங்கள் அன்பை விதைக்கச் செய்ததாக அங்கிருந்து நமக்குச் செய்திகள் கிடைக்கின்றன.

ஆனால் கன்னத்தில் அறைவாங்கிய சிறுவனின் உளபாதிப்புக்கும் (Trauma) அடிக்க உந்தப்பட்ட சிறுவனின் அதற்குப் பிந்தைய மனநிலைக்கும் வெறுப்பு என்னும் பெருந்தொற்று பரவிய சமுதாயமாக நாம் எப்படிப் பொறுப்பேற்கப் போகிறோம்?

அடிப்படைவாதச் சிந்தனையுள்ள பெரும்பான்மைக்கு நடுவே வாழும் மக்களுக்கு இஸ்லாமியத் தனிச்சட்டம் மட்டும் அவர்களுக்கான பாதுகாப்பை வழங்கிவிட முடியுமா? இந்தப் புரிதல் இல்லாமல் அன்பை ரொமாண்டிசைஸ் செய்வதால் எந்தவிதப் பயனும் இல்லை.

இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு
இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு Twitter

இத்தனைக்குப் பிறகும் ‘இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு’, ‘இப்பல்லாம் யாருங்க சாதி பாக்குறா’ போன்ற பொய் புரட்டுகளுக்கு கூட்டு மனசாட்சியை கப்பம் வைத்துக்கொண்டிருந்தால், பிரச்னைகளுக்கு நம்மால் பகுத்தறிவோடு விடை தேட முடியாது.

- ஐஷ்வர்யா, பத்திரிகையாளர்- பாலினக்கல்வி மற்றும் பப்ளிக் பாலிசி ஆய்வாளர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com