பெண் சிசுவை பாலினம் பார்த்து அழித்த மருத்துவர் கைது: இளம்பெண் உயிரிழப்பு
சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் பாலினம் பார்த்து கருக்கலைப்பு செய்ததோடு, அந்தப் பெண்ணின் மரணத்திற்கும் காரணமான மருத்துவர் கைது செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டம் வாழப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கர்ப்பிணி ஒருவர், தன் வயிற்றில் வளரும் குழந்தை ஆணா..? பெண்ணா..? என்பதை அறிய கடந்த 18-ஆம் தேதி சென்றிருக்கிறார். வயிற்றில் வளரும் குழந்தை ஆணா பெண்ணா..? என்பதை முன்கூட்டியே தெரிவிக்க சட்டத்தில் இடமில்லை. மீறி தெரிவித்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் விதிமுறையை பின்பற்றாமல் சட்டவிரோதமாக அங்கிருந்த மருத்துவர் செல்வாம்பாள், அப்பெண்ணின் கருவில் உள்ளது பெண் குழந்தை எனக் கூறியுள்ளார். இதனையடுத்து பெண் குழந்தை தனக்கு பிறக்கப்போவதை விரும்பாத அப்பெண் அங்கேயே கருக்கலைப்பும் செய்து கொண்டார். அங்கிருந்த மருத்துவர் செல்வாம்பாளே இதனை செய்துள்ளார்.
இதைத்தொடர்ந்து அப்பெண்ணுக்கு அதிக உதிரப்போக்கு ஏற்பட்டிருக்கிறது. எனவே பெண்ணின் கருப் பையையும் மருத்துவர் செல்வாம்பாள் அகற்றியிருக்கிறார். இந்நிலையில் பெண்ணின் உடல்நிலை தொடர்ந்து மோசமானதால் மற்றொரு தனியார் மருத்துவனைக்கு அந்தப் பெண்ணை மருத்துவர் செல்வாம்பாள் அனுப்பி வைத்திருக்கிறார். அங்கு சென்ற சில நிமிடங்களிலேயே அப்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து செல்வாம்பாள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த மருத்துவமனையில் உள்ள ஸ்கேன் மையத்தில் கடந்த 19-ம் தேதி மருத்துவ அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் ஸ்கேன் எடுப்பவர்களின் விவரங்கள் முறையாக பராமரிக்காமல் இருந்தது. எனவே அன்றைய தினமே ஸ்கேன் மையத்திற்கு சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்றைய தினம் மருத்துவமனைக்கும் சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.