வெளிநாட்டிற்கு கடத்தப்பட இருந்த கஞ்சா எண்ணெய் பறிமுதல்: மதிப்பு எவ்வளவு தெரியுமா?
தூத்துக்குடியில் இருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட இருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான ஹசீஸ் என்னும் கஞ்சா எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடியில் இருந்து கடல் வழியாக வெளிநாட்டிற்கு கடத்துவதற்காக ஹசீஸ் என்னும் கஞ்சா ஆயிலை பதுக்கி வைத்திருப்பதாக தென்மண்டல ஐஜி அஸ்ராகார்க்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ஐஜியின் தனிப்படை போலீசார் உதவி ஆய்வாளர் ரவிக்குமார் தலைமையில் தூத்துக்குடியில் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு பகுதியில் 5 கிலோ ஹசீஸ் வைத்திருந்த தூத்துக்குடி ஜார்ஜ் ரோடைச் சேர்ந்த ஆனந்த குமார் என்பவரை கைது செய்தனர். மேலும், இதில் தொடர்புடைய இந்திரா நகரைச் சேர்ந்த சார்லஸ், வண்ணார் தெருவைச் சேர்ந்த அருண் ஆகியோரையும் கைது செய்தனர்.
தொடர்ந்து, இவர்களிடம் இருந்த சுமார் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருளை கைப்பற்றி விசாரணை செய்ததில் இந்த கஞ்சா ஆயில் தூத்துக்குடியில் இருந்து கடல் வழியாக வெளிநாடுகளுக்கு கடத்தப்பட இருந்தது தெரியவந்தது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த தெற்கு காவல் நிலைய போலீசார் கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பேரூரணி சிறையில் அடைத்தனர்.