மதுபோதையில் பெண் காவல் ஆய்வாளரிடம் தகராறில் ஈடுபட்ட திமுக ஒன்றிய செயலாளர்..!
மதுபோதையில் பெண் காவல் ஆய்வாளரிடம் தகராறில் ஈடுபட்ட பொன்னமராவதி திமுக ஒன்றிய செயலாளர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி திமுக ஒன்றிய செயலாளராக இருப்பவர் அடைக்கலமணி. இவர் நேற்று இரவு மதுபோதையில் காரில் வந்துள்ளார். அப்போது வளையப்பட்டி ஐந்தாம் நம்பர் ரோட்டில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இதில் அடைக்கலமணி காரையும் நிறுத்தி போலீசார் விசாரணை செய்துள்ளனர்.
இதையடுத்து போக்குவரத்து பெண் காவல் ஆய்வாளர் பிரான்சிஸ் மேரியை தகாத வார்த்தையில் பேசிய அடைக்கலமணி மோதலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து மதுபோதையில் கார் ஓட்டியது, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது, மதுபோதையில் அநாகரிகமாக நடந்து கொண்டது உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் போலீசார், திமுக ஒன்றிய செயலாளர் அடைக்கலமணி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவரது மனைவி சுதா பொன்னமராவதி ஒன்றிய சேர்மனாக இருப்பது குறிப்பிடத்தக்கது.