அறந்தாங்கி: சிறுமி குடும்பத்திற்கு திமுக 5 லட்சம் நிதியுதவி
அறந்தாங்கி அருகே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமி குடும்பத்திற்கு திமுக சார்பில் ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. கொடுஞ்செயலில் ஈடுபட்ட இளைஞர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து உடலை பெற்றுக்கொண்ட குடும்பத்தினர், நல்லடக்கம் செய்தனர்.
படுகொலை செய்யப்பட்ட சிறுமி பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் வன்கொடுமை தடுப்புச் சட்ட நிதியுதவி தொகையாக அவரின் குடும்பத்திற்கு 8 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி தெரிவித்தார். அதில் முதற்கட்டமாக 4லட்சத்து 12ஆயிரம் ரூபாய் சிறுமியின் பெற்றோரிடம் அளிக்கப்பட்டது. மேலும், முதலமைச்சர் அறிவித்த நிவாரணமான 5 லட்சம் ரூபாய் நிதியும் வழங்கப்பட்டது.
இந்நிலையில், சிறுமி குடும்பத்திற்கு திமுக சார்பில் ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. திருமயம் எம்.எல்.ஏ ரகுபதி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் சிறுமி குடும்பத்தினரிடம் நிதியை வழங்கினர்.