``பேருந்தில் மது அருந்திய மாணவ-மாணவிகள் மீது நடவடிக்கை உறுதி”- மாவட்ட கல்வி அலுவலர்

``பேருந்தில் மது அருந்திய மாணவ-மாணவிகள் மீது நடவடிக்கை உறுதி”- மாவட்ட கல்வி அலுவலர்
``பேருந்தில் மது அருந்திய மாணவ-மாணவிகள் மீது நடவடிக்கை உறுதி”- மாவட்ட கல்வி அலுவலர்

பள்ளி சீருடை அணிந்த மாணவிகள் சிலர், பேருந்தில் பயணிக்கையில் மது அருந்தும் வீடியோ காட்சி கடந்த சில நாள்களாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து பார்த்தபோது அம்மாணவிகள் செங்கல்பட்டை சேர்ந்த பள்ளியொன்றை சேர்ந்தவர்கள் என்று தெரியவருவதாக கூறியுள்ள காவல்துறை தரப்பு, இதுதொடர்பாக காவல்துறை மற்றும் மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உள்ளனர் என்றும் கூறியுள்ளனர்.

செங்கல்பட்டில் திருக்கழுக்குன்றத்திலிருந்து தச்சூருக்கு பயணிக்கும் பாதையில் பேருந்தொன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை எடுக்கப்பட்ட வீடியோ என்பது காவல்துறையினர் தெரிவிக்கும் தகவலாக இருக்கிறது. இந்த வழியில் சென்று கொண்டிருக்கையிலேயே, கும்பலாக சில மாணவர்கள் - மாணவிகள் என இரு பாலினரும் பேருந்துக்குள் வைத்து மது பாட்டில்களை திறந்து, குடிக்க ஆரம்பித்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்ட கல்வி அலுவலர் ரோஸ் நிர்மலா, இந்த சம்பவத்தை செய்தித்தாளொன்றுக்கு அளித்த பேட்டியில் உறுதிபடுத்தியுள்ளனர்.

அலுவலர் ரோஸ் நிர்மலா தனது அப்பேட்டியில், “இச்சம்பவம், பள்ளி வளாகத்துக்கு வெளியில் நடந்திருக்கிறது. காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” எனக்கூறியுள்ளார்.

கடந்த வருட இறுதியில், திருவள்ளூர் கவரைப்பேட்டையில் பள்ளி மாணவி ஒருவர் ஓடும் ரயிலில் ஏறி காலை உரசியபடி விபரீத விளையாட்டில் ஈடுபட்ட சம்பவமும் இதேபோல அதிர்ச்சியை உருவாக்கியது இங்கே நினைவுகூறத்தக்கது. இது தொடர்பாக அப்போது வெளியான வீடியோ காட்சியில், ஓடும் ரயிலில் ஏறும் மாணவி, நடைமேடையில் காலை உரசியபடியே செல்வதைக் காண முடிந்தது. அந்த வீடியோவைக் கண்டவுடன், அந்த மாணவி மற்றும் மாணவரை அவர்களது பெற்றோர்களுடன் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து எச்சரிக்கையும் அறிவுரை வழங்கியிருந்தார் எஸ்பி வருண் குமார்.

தமிழகத்தில் சிறார் குற்றங்களும், சிறார் ஒழுங்கீன நடவடிக்கைகளும் இப்படியாக தொடர்ந்து வருவதால், அவற்றை தடுக்க அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென குழந்தை நல ஆர்வலர்கள் கோரிக்கைகள் வைத்துவருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com