முகநூலில் நட்பாக பழகி, காதலித்து ஏமாற்றியதாக போஸ்டர் அடித்து ஒட்டிய பெண்.. நிலக்கோட்டையில் பரபரப்பு!

முகநூலில் நட்பாக பழகி பிறகு காதலித்து ஏமாற்றியதாக போஸ்டர் அடித்து ஒட்டிய பெண் உட்பட மூன்று பேரை போலிசார் கைது செய்தனர்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே கொங்கபட்டி கிராமத்தை சேர்ந்தவர் குருவையா. நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் பூ ஏற்றுமதி கடை நடத்தி வருகிறார். இவரது மகன் ரோஷன் பட்டதாரி இளைஞர் ஆவர்.

பொள்ளாச்சி அருகே வடக்குபாளையத்தைச் சேர்ந்த உஷா என்ற பெண், ரோஷன் உடன் முகநூல் பக்கத்தில் பழகிவந்துள்ளதாக தெரிகிறது. பின்னர் உஷாவின் முகநூல் கணக்கை ரோஷன் ப்ளாக் செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து நட்பை தொடர முடியாத உஷா பல்வேறு செல்போன் நம்பர்களில் இருந்து பேசி ரோசனை தொடர்ந்து தன்னை காதலிக்க சொல்லி வற்புறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. கடைசியில் பொள்ளாச்சியில் இருந்து தனது உறவினர் கிருஷ்ண வேணி என்பவர் உடன் கொங்கப்பட்டிக்கு வந்துள்ளார். அந்த கிராமத்தில் இருந்த சிவஞானம் என்பவரிடம் ரோஷன் தன்னை காதலித்து ஏமாற்றி விட்டதாக சொல்லி பிரச்சினையை பேசி தீர்த்து வைக்குமாறு கேட்டுள்ளார். அவர் உஷாவிற்கு உதவ முன்வந்த நிலையில் திடீரென ”கொங்கபட்டி பகுதியில் நிலக்கோட்டையில் பூக்கடை வைத்திருக்கும் கொங்கு பட்டியைச் சேர்ந்த குருவையா மகன் ரோஷன் என்பவர் என்னை காதலித்து ஏமாற்றி விட்டார்” என்ற வாசகங்களுடன் ரோஷனும் உஷாவும் இணைந்து இருக்கும் போஸ்டர் அப்பகுதி முழுவதும் ஒட்டப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ரோஷன் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் உஷா தன் நண்பர்களுடன் இணைந்து குருவையாவை வழிமறித்து ரோஷன் விவகாரத்தை பெரிதுபடுத்தாமல் இருக்க ரூபாய் 5 லட்சம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து தன்னை பணம் கேட்டு மிரட்டியும் தன் மகன் மீது அவதூறு போஸ்டர் ஒட்டியதாக நிலக்கோட்டை காவல் நிலையத்தில் குருவையா புகார் அளித்தார். அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட நிலக்கோட்டை போலீசார் முகநூல் பெண் பொள்ளாச்சி உஷா மற்றும் கிருஷ்ணவேணி, சிவஞானம் ஆகிய மூன்று பேரை கைது செய்து நிலக்கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com