தருமபுரி: பாலினம் கண்டறிந்து கருக்கலைப்பு செய்த வழக்கு - செவிலியரின் கணவர் கைது
தருமபுரியில் கருவிலிருக்கும் சிசுவின் பாலினம் கண்டறிந்து கருக்கலைப்பு செய்த சம்பவத்தில் செவிலியரின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சட்ட விரோதமாக கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தை கண்டறிந்து கருக்கலைப்பு செய்து வந்ததாக நேற்று முன்தினம் 7 பேரை தருமபுரி நகர காவல் துறையினர் கைது செய்தனர்.
இதில் ஸ்கேன் செய்யும் இயந்திரம் வைத்திருந்த சதீஷ்குமார், சுதாகர், கருக்கலைப்பு செய்வதற்கு உடந்தையாக இருந்த சுதாகர் செவிலியர் கற்பகம் இடைத்தரகர்கள் ஜோதி சரிதா, ஆட்டோ டிரைவர் வெங்கடேசன், குமார் உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனர்.
மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய செவிலியர் கற்பகம் என்பவரின் கணவர் விஜயகுமார் உள்ளிட்ட சிலரை காவல் துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த விஜயகுமாரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த வழக்கில் கைதாகியுள்ள சுதாகர், சதீஷ்குமார் ஆகிய இருவரும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருப்புத்தூரில் இதே போன்று சட்ட விரோத செயலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு பிணையில் வெளியில் வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது