தருமபுரி: போலி பணி நியமன ஆணை வழங்கி பண மோசடி – அரசு மருத்துவமனை உதவியாளர் கைது

தருமபுரி அருகே மருத்துவமனையில் உதவியாளர் பணிக்கு போலியாக பணி நியமன ஆணை கொடுத்த மருத்துவமனை உதவியாளர் கைது. வேலை வாங்கித் தருவதாக பல பேரிடம் லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
Accused
Accusedpt desk

செய்தியாளர்: சே.விவேகானந்தன்

தருமபுரி மாவட்டம் கடத்தூர் அடுத்த மடதள்ளி கிராமத்தைச் சார்ந்த அதியமான் என்பவர், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியர்களின் உதவியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் போது, மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின், உறவினர்களோடு நன்றாக பேசி அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் செய்து வந்துள்ளார். மேலும் தனக்கு மருத்துவத் துறை அதிகாரிகள் மற்றும் நீதித்துறை அதிகாரிகளை தெரியும் என்றும் அவர்களின் மூலமாக அரசு வேலைகள் வாங்கித் தர முடியும் என ஆசை வார்த்தை கூறி பலரை ஏமாற்றி வந்துள்ளார்.

fake appointment order
fake appointment orderpt desk

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாப்பாரப்பட்டி அடுத்த ஆலமரத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் சமதர்மன் என்பவரின் மனைவி அகிலா, தனது தந்தையின் சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்துள்ளார். அப்போது, அவரிடம் அதியமான் மருத்துவமனையில் சிறு சிறு உதவிகளை செய்து கொடுத்துள்ளார். இதையடுத்து போன் நம்பரை வாங்கிக் கொண்டு அடிக்கடி பேசியதில், இருவருக்குள் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அகிலாவுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி ரூ.7 லட்சம் பணம் பெற்றுள்ளார். மேலும் அகிலாவின் உறவினர் ஒருவருக்கு அரசு மருத்துவமனையில் உதவியாளர் பணிக்கு ஆள் தேவைப்படுவதாக கூறி, ரூ.4 லட்சம் பணம் பெற்றுக் கொண்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அலுவலக உதவியாளர் பணிக்கான பணி நியமன ஆணையை போலியாக தயாரித்து வழங்கியுள்ளார்.

Accused
தமிழகத்தில் கடந்த 6 ஆண்டுகளில் இத்தனை ஆயிரம் கொலைகளா...? RTI மூலம் அம்பலமான அதிர்ச்சி தகவல்கள்!

இதனை தொடர்ந்து பணி நியமன ஆணை போலியான என தெரியவந்ததும் அகிலாவுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அகிலா, தனது பிள்ளைகளை அழைத்துக் கொண்டு அதியமானுடன் திருப்பூர் சென்று வாடகை வீட்டில் தங்கி இருந்துள்ளனர். இந்த நிலையில் மனைவி மற்றும் குழந்தைகளை அதியமான் கடத்திச் சென்றதாக அகிலாவின் கணவரான ராணுவ வீரர் சமதர்மன் பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில், அதியமான் ராணுவ வீரரின் மனைவி மற்றும் குழந்தைகளை திருப்பூரில் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து திருப்பூர் சென்ற பாப்பாரப்பட்டி காவல் துறையினர் அதியமான் மற்றும் அகிலா மற்றும் கழந்தைகளை அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

Police station
Police stationpt desk

விசாரணையில், அதியமான் அரசு மருத்துவமனைக்கு வரும் பெண்களிடம் மருத்துவ உதவி செய்வதாக ஆசை வார்த்தை கூறி, செல்போன் நம்பரை கொடுத்து அடிக்கடி பேசுவதும், மருத்துவமனைக்கு விபத்தில் காயமடைந்து ஆபத்தான சூழலில் வரும் பொதுமக்களிடம், இந்த மருத்துவமனையில் இருந்தால் உயிர்பிழைக்க முடியாது. சேலம் தனியார் மருத்துவமனைக்கு செல்லுங்கள் என கூறி, தனியார் மருத்துவமனையில் கமிஷன் வாங்கியதும் தெரியவந்தது. போலியாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உதவியாளர் பணிக்கு, பணி நியமன ஆணை தயாரித்துக் கொடுத்ததும் தெரியவந்தது. அதேபோல் பல பேரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக லட்சக்கணக்கில் பணம் வாங்கி ஏமாற்றியதும் காவல்துறை விசாரணையில் தெரியவந்தது.

Accused
கர்நாடகா | உயிரை மாய்த்துகொள்ள நினைத்த பெண் - உடன் வந்து உயிர்காத்த வளர்ப்பு நாய்!

இந்நிலையில், அதியமானை பாப்பாரப்பட்டி காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் அதியமான் ஏற்கனவே இரண்டு திருமணம் செய்திருந்த நிலையில், ஒரு மனைவியை தனியாக வீடு எடுத்து வைத்திருந்ததும் தெரியவந்தது. பல பேரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்து போலியாக பணி நியமன ஆணை தயாரித்து கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com