தருமபுரி: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை - கணவன் மனைவி போக்சோவில் கைது
தருமபுரி அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கணவன், உடந்தையாக இருந்த மனைவி இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
தருமபுரி அருகே 16 வயது சிறுமியை, அவரது பெற்றோர் உறவினர் வீட்டில் தங்கி படிக்க வைத்துள்ளனர். சிறுமி தங்கியிருந்த வீட்டின் மேல்மாடி வீட்டில், ஓம்சக்தி - கவிதா தம்பதியினர் குடியிருந்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் 11ஆம் தேதி, சிறுமி பள்ளி முடித்து வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது கவிதா, சிறுமியை மேலே அழைத்துள்ளார்.
இதையடுத்து மேலே சென்ற சிறுமியிடம் பேசிய கவிதா, "உனது மாமா உன்மீது ஆசைப்படுகிறார். வீட்டிற்குள் போ, நீ அவர் சொல்லும் படி கேள்" என்று கூறியுள்ளார். ஆனால் அதற்கு சிறுமி மறுத்துள்ளார். அப்போது "உன்னை என் தங்கச்சிதான் படிக்க வைக்கிறார். நீ வீட்டிற்குள் போகவில்லை என்றால், படிக்க முடியாமல் போய்விடும். மேலும் ஓசூரில் உள்ள உனது தாயை, ஓம்சக்தி கொலை செய்துவிடுவார்" என மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து சிறுமியை வீட்டினுள் வைத்து கவிதா வெளியே தாழ்ப்பாள் போட்டு விட்டு சென்றதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து கவிதாவின் கணவர் ஓம்சக்தி சிறுமியின் வாயை துணியால் அடைத்து பாலியல் தொந்தரவு செய்ததாக சிறுமியின் பெற்றோர் தருமபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த புகாரை தொடர்ந்து சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த ஓம்சக்தி மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி கவிதா ஆகிய இருவரையும் தருமபுரி அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.