கொரோனோ பரவல்: தமிழக காவல்துறையினருக்கு 22 கட்டுப்பாடுகள்..!
கொரோனோ பரவலைத் தடுக்க தமிழக காவல்துறையினருக்கு 22 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
மானியக்கோரிக்கை மீதான விவாதம் சட்டப்பேரவையில் இன்று நடைபெற்று முடிந்தது. அதன் தொடர்ச்சியாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி பேசினார். அப்போது கொரோனா பரவலைத் தடுக்க தமிழகத்தில் அனைத்து மாவட்ட எல்லைகளை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது என்றார். அதன்தொடர்சியாக நாளை மாலை 6 மணிக்கு அமலாகும் இந்த உத்தரவு மார்ச் 31 ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கொரோனோ பரவலைத் தடுக்க தமிழக காவல்துறையினருக்கு 22 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகத் தமிழ டிஜிபி திரிபாதி சில உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையில் கொரானா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களையும், கொரானா அறிகுறி உடையவர்களையும் கண்காணிக்கும் பணியில் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் இணைந்து காவல்துறை அதிகாரிகளும் பணிபுரிய உள்ளனர். ஒவ்வொரு உதவி ஆணையர் கீழ் உள்ள உதவி ஆய்வாளர் தனிமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. உதவி ஆய்வாளர் கீழ் மூன்று காவலர்கள் செயல்படுவார்கள்”எனக் கூறியுள்ளார்.
மேற்கொண்டு, கொரானா பாதிக்கப்பட்டவர்களையும் அதன் அறிகுறி உடையவர்களையும் அணுகுவதற்கான பிரத்தியேகமாக உடல் கவசம், முகக்கவசம் தற்காப்பு பொருட்கள் காவல்துறைக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றும் கொரானா அறிகுறி மற்றும் பாதிப்புக்குள்ளானவர்கள் சுகாதாரத்துறை அதிகாரிகளும் காவல்துறை அதிகாரிகளும் கண்காணிப்பர் என்றும் பாதிப்புக்குள்ளானவர்களைத் தனிமைப்படுத்தவும், வெளியில் யாரிடமும் சென்று நோய் பரவாமல் இருக்கவும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காய்ச்சல் , இருமலுடன் காவல்நிலையத்திற்கு யார் வந்தாலும் உள்ளே அனுமதிக்கக் கூடாது, காவலர்களுக்குக் கூட்டங்கள் நடத்தத் தடை, காவல் நிலையத்திற்கு வரும் புகார்தாரர்கள் அனைவரும் சோதனை செய்ய வேண்டும், இமெயில், செல்போன், தபால் மூலம் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள வேண்டும் என்பன போன்ற பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.