பொது இடத்தில் புகைப்பிடிக்க வேண்டாம் என்று கூறிய மாணவர் கொலை
டெல்லியில் பொது இடத்தில் புகைப்பிடிக்க வேண்டாம் என்று கூறியதற்காக புகைப்பட துறை மாணவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
டெல்லியில் புகைப்பட துறையைச் சேர்ந்த குர்பிரீட்(21), மனிந்தர்(22) என்ற இரண்டு மாணவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபாதை வாசிகள் தொடர்பாக ஆவணப்படம் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இரவு ஒரு மணியளவில் மருத்துவமனை ஒன்றின் புறநோயாளிகள் பிரிவுக்கு அருகில் உள்ள கடையில் மாணவர்கள் இருவரும் உணவு அருந்தினர். அப்போது, அவர்கள் உணவருந்திக் கொண்டிருந்தபோது, ரோகித் கிருஷ்ணா என்பவர் அங்கு வந்துள்ளார். அவர் உடனடியாக புகைப்பிடிக்க தொடங்கியுள்ளார்.
ரோகித் கிருஷ்ணா புகையை மாணவர்கள் மீது ஊதியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பொது இடத்தில் புகை பிடிக்க வேண்டாம் என்று ரோகித் கிருஷ்ணாவிடம் மாணவர்கள் வலியுறுத்தினர். அப்போது இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் கைகலப்பில் முடிந்தது. இதனையடுத்து, மற்ற பொதுமக்கள் கேட்டுக் கொண்டதால், மாணவர்கள் அங்கிருந்து தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு கிளம்பினர். இருப்பினும், மாணவர்களை விடாது தனது காரில் ரோகித் பின் தொடர்ந்துள்ளார். ஒருகட்டத்தில் தனது காரை கொண்டு மாணவர்களின் பைக்கை ரோகித் மோதியதாக கூறப்படுகிறது. இதில், கீழே விழுந்து மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். அதில் மாணவர் குர்பிரீட் சிங் உயிரிழந்தார். மற்றொரு மாணவர் படுகாயம் அடைந்தார்.
பின்னர் விசாரணையில் ரோகித் டெல்லி ஐ.ஐ.டி பேராசியரின் மகன் என்பதும் சட்டக்கல்லூரி மாணவர் என்பதும் தெரியவந்தது. மாணவர் ரோகித்தை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.