ஊராட்சி மன்ற தலைவர் பெயரில் 10 லட்சம் ரூபாய் மோசடி: மதுரை ஆட்சியரிடம் துணை தலைவர் புகார்
மதுரை திருமங்கலம் தாலுகா சௌடார்பட்டி ஊராட்சியில், ஊராட்சி மன்ற தலைவரின் பெயரில் 10 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியரிடம் ஊராட்சி துணை தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் புகார் அளித்துள்ளனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட சௌடார்பட்டி ஒன்றியத் தலைவராக ஆண்டிச்சி என்பவர் உள்ளார். இவரது மகன் தங்கப்பாண்டி அப்பகுதியிலுள்ள எஸ்.வலையபட்டி கிராமத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் திட்டம் மற்றும் முத்துப்பட்டி கிராமத்தில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் திட்டம் ஆகியவை துவங்கும் முன்னரே பணிகள் முடிக்கப்பட்டுவிட்டதாக கணக்கு காட்டி உள்ளதாக புகார் எழுந்துள்ளது. மேலும், அந்த பணிகளில் ஈடுபட்டதாக நூறு நாள் வேலைத்திட்ட பணியாளர்களின் வங்கி கணக்கில் முறைகேடாக பணம் வரவு செய்யப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதுபற்றி ஊராட்சி மன்ற துணை தலைவர் மதி சேகர் மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகரிடம் புகார் அளித்துள்ளார்.
இதுபற்றி மதிசேகர் கூறுகையில், “ஊராட்சி மன்ற தலைவரின் வெளிப்படை தன்மை இல்லாத நிர்வாகத்தாலும், குடும்ப உறுப்பினர்கள் தலையீட்டாலும் இவை நிகழ்ந்துள்ளன. இதனால் அவர் மீது நம்பிக்கை இல்லாத தன்மை ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து உடனடி தீர்வு வழங்க வேண்டும்” எனக்கூறி நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளதார்.
- இரா.நாகேந்திரன்