காதலிக்க மறுத்த சிறுமியின் குடும்பத்துக்கு கொலை மிரட்டல்: 3 பேர் போக்சோவில் கைது
கோபிசெட்டிபாளையத்தில் 15 வயது சிறுமியை காதலிக்கச் சொல்லி மிரட்டிய இளைஞர் உட்பட 3 பேரை போக்சோ வழக்கில் காவல் துறையினர் கைது செய்தனர்.
கோபிசெட்டிபாயைம் வாய்க்கால்ரோடு பகுதியைச் சேர்ந்தவரின் 15 வயது மகளுக்கு, அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், செல்போனில் தொடர்பு கொண்டு, தன்னை காதலிக்குமாறு கூறியுள்ளார். அதற்கு சிறுமி மறுக்கவே, ஆத்திரமடைந்த அந்த இளைஞர், காதலிக்கவில்லை என்றால் குடும்பத்துடன் அனைவரையும் கொலை செய்து விடுவதாகவும், சமூக வலைதளங்களில் இருந்து சிறுமியின் புகைப்படத்தை எடுத்து ஆபாச இணைய தளங்களில் வெளியிட்டு விடுவதாகவும் கூறி, இடுப்பில் பட்டாக் கத்தியுடன் இருப்பது போன்ற வீடியோவை சிறுமிக்கு அனுப்பி உள்ளார்.
இதைக் கேட்டு அச்சமடைந்த சிறுமி, தனது தாயிடம் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து, சிறுமியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் கோபி அனைத்து மகளிர் போலீசார், சிறுமியை மிரட்டிய இளைஞர் மௌலி ரஞ்சித், மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது நண்பர்களான அதே பகுதியைச் சேர்ந்த தௌபிக், தன்சீல், ஆகிய 3 பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.