\
வேறு ஜாதி பெண்ணை காதலித்த தலித் வாலிபர் அடித்துக்கொலை?

வேறு ஜாதி பெண்ணை காதலித்த தலித் வாலிபர் அடித்துக்கொலை?

வேறு ஜாதி பெண்ணை காதலித்த தலித் வாலிபர் அடித்துக்கொலை?
Published on

உயர்ஜாதி பெண்ணை காதலித்ததாக, தலித் வாலிபர் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ளது, கே புட்டாயிபள்ளி- பேராரெட்டி கொட்டல். இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் விஜய். வயது (18). தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த உயர் ஜாதி பெண்ணான, சுதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வுக்கும் காதல் ஏற்பட்டது. சுதா, பத்தாம் வகுப்பு படித்துவந்தார். வீட்டுக்குத் தெரியாமல் செல்போன் ஒன்றை வைத்திருந்த சுதா, அதன் மூலம் காதல் வளர்த்து வந்தார். இந்நிலையில் சுதாவும் விஜய்யும் பேசிக்கொண்டு வருவதை சுதாவின் உறவினர்கள் பார்த்துள்ளனர். சுதாவை அடித்து உதைத்துள்ளனர். பின்னர் ரோட்டில் விஜயை கண்ட அவர்கள், இனி சுதாவுடன் பேசுவதைக் கண்டால், கடும் விளைவைச் சந்திக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளனர்.

இதையும் மீறி அவர்கள் காதல் வளர்த்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் விஜய் காணாமல் போனார். உறவினர்கள் அவரைத் தேடி வந்த நிலையில், ரயில்வே தண்டவாளத்தில் பிணமாக மீட்கப்பட்டார், விஜய்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட விஜய் குடும்பத்தினர், சுதாவின் உறவினர்கள்தான் அடித்துக்கொன்று ரயில்வே டிராக்கில் வீசியுள்ளதாகவும் அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் புகார் கூறினர்.

இதுபற்றி விஜய்யின் மாமா, யென்னம் சந்திரசேகர் கூறும்போது, ’மார்ச் 10ம் தேதி சுதாவின் போனில் இருந்து விஜய்யை அவர் வீட்டுக்கு வரவழைத்துள்ளனர். நள்ளிரவில் அவரை துன்புறுத்தி அடித்துக் கொன்றுள்ளனர். பின்னர் ரயில்வே டிராக்கில் வீசிச் சென்றுள்ளனர்’ என்றார்.

போலீஸ் தரப்பில், ’விஜய், சுதாவின் வீட்டு மொட்டை மாடிக்கு சென்றுள்ளார். அப்போது சுதாவின் மாமா அவரை பிடித்துள்ளார். அவரும் சுதாவின் சித்தப்பாவும் சேர்ந்து இரும்பு கம்பியால் அடித்துள்ளனர். இதில் அவர் சுயநினைவை இழந்துள்ளார். இதையடுத்து அவரது உடலை ரயில்வே டிராக்கில் தூக்கி வீசிவிட்டு சென்றுள்ளனர்’ என்று தெரிவித்தனர். 
போலீசார் வழக்குப் பதிவு செய்து சுதாவின் உறவினர்களைத் தேடி வருகின்றனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com