3000 நொடி பேசி ரூ.13 லட்சம் கொள்ளை - பள்ளிப்படிப்பைக்கூட முடிக்காத ஜம்தாரா கொள்ளையர்கள்

3000 நொடி பேசி ரூ.13 லட்சம் கொள்ளை - பள்ளிப்படிப்பைக்கூட முடிக்காத ஜம்தாரா கொள்ளையர்கள்

3000 நொடி பேசி ரூ.13 லட்சம் கொள்ளை - பள்ளிப்படிப்பைக்கூட முடிக்காத ஜம்தாரா கொள்ளையர்கள்
Published on

3000 நொடிகள் பேசி ரூ. 13 லட்சம் நூதன முறையில் திருடிய "ஜம்தாரா" கொள்ளையர்கள். பள்ளிபடிப்பையே முடிக்காமல் சைபர் மோசடி குறித்து பயிற்சி பெற்று இந்தியா முழுவதும் சைபர் கிரைம் மோசடிகளை அரங்கேற்றும் "ஜம்தாரா" கொள்ளையர்கள் யார்? - பார்க்கலாம்.

சென்னை கோடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த உதயசங்கர் (75) சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவில் புகார் ஒன்றை அளித்தார். புகாரில், கடந்த மாதம் 26 ஆம் தேதி தனது செல்போன் எண்ணுக்கு வந்த குறுஞ்செய்தியில் தனது சிம் கார்டுக்கான ஆவணங்கள் சமர்பிக்கப்படாமல் இருப்பதாகவும், 24 மணி நேரத்திற்குள் ஆவணங்களை சமர்பிக்காவிட்டால் செல்போன் இணைப்பு துண்டிக்கப்படும் எனவும் கூறியதுடன், இதைத் தவிர்க்க வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்புகொண்டு பேச ஒரு தொலைபேசி எண்ணும் அளிக்கப்பட்டிருந்தது.

அதை நம்பி அந்த எண்ணுக்கு தொடர்புகொண்டு பேசியபோது பதிலளித்த நபர் அதே காரணத்தைக் கூறி தங்கள் செல்போன் இணைப்பு துண்டிக்கப்படாமலிருக்க உடனடியாக தான் அனுப்பும் www.rechargecube.com என்ற லிங்க் இணையதளத்தை க்ளிக் செய்து 5 ரூபாய் ரீசார்ஜ் செய்தால் போதும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. செல்போன் சேவை துண்டிக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் பணத்தை செலுத்தியிருக்கிறார். இணையதளம் மூலம் வங்கிக்கணக்கின் தகவல்களை பதிவுசெய்து பணத்தை அனுப்பியுள்ளார். ஆனால் செல்போன் சேவை மையத்தை சேர்ந்தவர்கள் பணம் வரவில்லை என்று கூறியதால், வேறொரு வங்கிக்கணக்கு மூலம் பணத்தை செலுத்துமாறு கூறியதாகவும், அதனடிப்படையில் தன் மனைவியின் இரண்டு வங்கிக்கணக்கை இணையத்தில் பதிவு செய்து முயற்சித்தார்.

எனினும் தன்னிடம் வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரிபோல் பேசிய நபர் மீண்டும் பணம் வரவில்லை என்றும் சிறிது நேரம் கழித்து மீண்டும் முயற்சி செய்யுமாறும் கூறி இணைப்பை துண்டித்துவிட்டதாகவும் தெரிவித்த அவர், இணைப்பு துண்டிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே தனது வங்கிக்கணக்கு மற்றும் தனது மனைவியின் இரு வங்கிக் கணக்கு என 3 வங்கிக் கணக்குகளிலிருந்து 90 ஆயிரம், 8.60 லட்சம், 3.60 லட்சம் வீதம் சுமார் 13 லட்சம் ரூபாய் பணம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதனையடுத்து தான் அழைத்த வாடிக்கையாளர் சேவைமைய தொடர்பு எண்ணை மீண்டும் அழைத்தபோது அழைப்பை எடுக்காததை அடுத்து தான் ஏமாந்ததை அறிந்துள்ளார். இதுகுறித்து தக்க நடவடிக்கை எடுத்து தங்கள் பணத்தை மோசடி நபர்களிடம் இருந்து மீட்டுத் தருமாறு புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் இணைய வழியில் ஆள்மாறாட்ட மோசடி உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து புலன்விசாரணையை மேற்கொண்டனர். அவர்கள் தொடர்புகொண்ட தொலைபேசி எண்ணை வைத்து விசாரணையை போலீசார் மேற்கொண்டனர்.

அந்த எண் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவிலிருந்து செயல்படுவது தெரிந்து சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் வினோத்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் கொல்கத்தா விரைந்தனர். கொல்கத்தாவிலுள்ள ஹவுரா நகரில் பதுங்கியிருந்த ஜார்கண்ட் மாநிலம் ஜம்தாரா பகுதியைச் சேர்ந்த பிஷ்வநாத் மண்டல், பாபி மண்டல் மற்றும் ராம்புரோஷாத் நாஷ்கர் ஆகிய மூன்று பேரை சுற்றிவளைத்து கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியதில், செல்போன் சேவை மையத்தில் இருந்து அனுப்புவதுபோல், bulk SMS என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, குறிப்பிட்ட செல்போன் நிறுவனத்தின் செல்போன் எண்களை எடுத்து கடைசி நான்கு எண்களை மட்டும் மாற்றி நூற்றுக்கணக்கான மக்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி மோசடி செய்தது தெரியவந்துள்ளது. குறிப்பாக குறுஞ்செய்தி அனுப்பப்பட்ட எண் உள்ள சிம்கார்டுக்கு ஆதார் போன்ற ஆவணங்களை சமர்பிக்கவில்லை எனக்கூறி, உடனடியாக தொடர்பு கொள்ளுமாறு ஒரு செல்போன் எண்ணையும் அனுப்புகின்றனர். செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டு விடுமோ என சிலர் அச்சத்தில் தொடர்புகொள்வதன் மூலம், வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை கொள்ளை அடிக்கின்றனர். இதேபோலதான் முதியவரான உதயசங்கரிடம் 50 நிமிடங்கள் பேசி 13 லட்ச ரூபாய் கொள்ளையடித்ததாக தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக வாடிக்கையாளர் சேவை மையத்தில் இருந்து அனுப்பும் லிங்கை கிளிக் செய்யும்போதே, team viewer, quick support , fast support போன்ற செயலிகளை, மக்களுக்கு தெரியாமல் பதிவிறக்கம் செய்து, வங்கிக் கணக்கு தொடர்பான விவரங்களை செல்போனில் அவர்கள் குறிப்பிட்ட இணையதளத்தில் பதிவு செய்யும்போது நோட்டமிட்டு உடனடியாக வங்கிக்கணக்கில் இருந்து பணத்தை கொள்ளை அடிக்கின்றனர். இவ்வாறு மக்களுக்கு தெரியாமல் பதிவிறக்கம் செய்யப்படும் செயலியை ஆக்டிவேட் செய்வதற்கு அனுப்பப்படும் 8 இலக்க otp எண்ணை, உங்களுக்கு அளிக்கப்படும் சேவைக்கான எண் எனக்கூறி ஏமாற்றி வாங்கிக் கொள்கின்றனர். அந்த 8 இலக்க எண்ணை பயன்படுத்தி செயலிகளை ஆக்டிவேட் செய்து, மக்களின் செல்போனை நோட்டம் விட ஆரம்பிக்கின்றனர். இவ்வாறு பல்வேறு தொழில்நுட்பங்களை அறிந்த கொள்ளையர்கள் பள்ளிப்படிப்பைக்கூட முடிக்காத நபர்கள் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. முறையாக எழுதிப்படிக்க தெரியாவிட்டலும், சைபர் கிரைம் தலைநகரமான ஜம்தாராவில், வங்கிக் கணக்கில் எவ்வாறு நூதன முறையில் கொள்ளை அடிப்பது என பயிற்சி எடுத்துக்கொண்டு கோடிக்கணக்கில் கொள்ளையடித்து வருவதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு நூதன முறையில் வங்கிக் கணக்கில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை நேரடியாக தங்களது வங்கிக் கணக்குகளுக்கு மாற்றிக்கொள்ளாமல், அதிலும் நூதனமுறையை கையாண்டு பணத்தை எடுப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. குறிப்பாக ஏமாந்த மக்களின் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுத்து மேற்கு வங்க மின்சார வாரியத்தில், குறிப்பிட்ட தனியார் ஜீன்ஸ் தயாரிக்கும் நிறுவனத்தின் மின்சார கட்டணத்தை செலுத்தி இருப்பது தெரியவந்துள்ளது.

மேற்கு வங்கத்தில் தனியார் மூலமாகவே மின்சார கட்டணம் செலுத்தப்படுவதால் அதனை பயன்படுத்திக்கொண்டு, கட்டணம் செலுத்தும் தனியார் நிறுவனங்கள் மற்றும் தரகர்கள் மூலம் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை வைத்து மின்சாரம் கட்டணம் செலுத்தியது தெரியவந்துள்ளது. மேலும் அந்த தரகர்கள் மற்றும் தனியார் மின்சார கட்டணம் செலுத்தும் நிறுவனத்திடம் கமிஷன் கொடுத்து, கொள்ளையடித்த பணத்தை ரொக்கமாக மாற்றி செலவழிப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இவ்வாறாக வங்கிக் கணக்கில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம் எங்கு செல்கிறது என்பதை தேடிச்செல்லும் போதுதான் இந்த சைபர் கும்பல்கள் சிக்கியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே இதேபோன்று கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு ஆகியவற்றில் இருந்து பணத்தை கொள்ளையடித்து டெல்லி மின்சார வாரியத்திற்கு செலுத்தி, டெல்லியில் மின்சாரகட்டணம் செலுத்தும் தனியார் நிறுவனம் மூலம் கமிஷன் கொடுத்து ரொக்கமாக பணத்தை மாற்றும் கும்பலை சென்னை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு கொள்ளையடித்த பணத்தை ரொக்கமாக மாற்றுவதன் மூலம் போலீசாரிடம் எளிதில் சிக்கமுடியாது என்ற அடிப்படையில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியது தெரியவந்துள்ளது.

அவர்களிடம் இருந்து 20 செல்போன்கள், 160 சிம் கார்டுகள், 19 ஏ.டி.எம் கார்டுகள், 4 ஸ்வைபிங் மிஷின்கள், 11 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணம், 148 கிராம் தங்கம் மற்றும் 1 ஹோண்டா சிட்டி கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட மூவரிடமும் விசாரணை நடத்தியதில், அவர்கள் கொல்கத்தாவில் இருந்து செயல்பட்டு பல்வேறு மாநிலங்களில் வங்கிக் கணக்கு உள்ளவர்களைக் குறிவைத்து செல்போன் வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரிபோல் பேசி, பல லட்சம் ரூபாய் வரை பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் அவர்கள் மூவரையும் அங்குள்ள ஹவுரா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி டிரான்சிட் வாரண்ட் பெற்று இன்று சென்னை அழைத்து வந்து எழும்பூர் குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன் ஆஜர்படுத்தினர். உடனே கைது செய்யப்பட்ட மூன்று சைபர் கிரைம் கொள்ளையர்களை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றத்தில் சைபர் கிரைம் போலீசார் மனுத்தாக்கல் செய்தனர். காவல்துறையினரின் மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி கோதண்ட ராஜ் 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் அனுமதி அளித்துள்ளார். தலைமறைவாக உள்ள மற்ற மோசடி நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com