மதுரை: கைதுசெய்ய வரும்போதெல்லாம் பிளேடால் அறுத்துக்கொண்டு தப்பிவந்த குற்றவாளி கைது
கைதுசெய்ய வரும்போதெல்லாம் தன்னைத்தானே பிளேடால் அறுத்துக்கொண்டு போலீஸ் பிடியிலிருந்து தப்பிவந்த குற்றவாளியை போலீசார் கைதுசெய்துள்ளனர்.
மதுரை மாநகர் திடீர்நகர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட மேலவாசல் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மகன் நாகராஜ் (எ) அஜித் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். மேலும் இவரை குற்றவழக்கு சம்பந்தமாக காவல்துறையினர் கைதுசெய்ய முற்படும்போது அவர் தன்னைத்தானே பிளேடால் தனது கைகளில் வெட்டி ரத்த காயத்தை ஏற்படுத்திக் கொண்டு அதன்மூலம் போலீசார் கைதுசெய்வதில் இருந்து தப்பித்து வந்துள்ளார்.
இந்நிலையில், நாக்ராஜ் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து, பெரியார் பஸ் நிலையம் அருகே வந்துகொண்டிருந்த அவனியாபுரம் MMC காலனியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரிடமிருந்து கைபேசி மற்றும் இருசக்கர வாகனத்தை பிடுங்கிக்கொண்டு விக்னஷை அடித்து உதைத்து காயம் ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த குற்றப்பிரிவு தடுப்பு சார்பு ஆய்வாளர் மணிக்குமார் மற்றும் தனிப்படையினர், நீண்ட நாட்களாக காவல்துறை கைதுசெய்வதில் இருந்து தப்பிவந்த மேலவாசல் நாகராஜ் என்ற அஜித் மற்றும் அவனது நண்பர்கள் நான்கு பேரை கைதுசெய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.