காதல் போட்டியால் தோழியை கொன்று புதைத்த இளம்பெண்
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே காதல் போட்டியில் இளம்பெண்ணை அவரது தோழியே கொன்று புதைத்த சம்பவம் இரண்டு மாதங்களுக்குப்பிறகு தற்போது வெளியே வந்துள்ளது.
பண்ருட்டி அருகே புலியூர் பகுதியை சேர்ந்த திவ்யா, செவிலியர் பயிற்சி முடித்துவிட்டு பண்ருட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். அதே மருத்துவமனையில் பணியாற்றிய சித்ரா என்ற பெண்ணுடன் திவ்யா நெருங்கிய நட்புடன் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த மே மாதம் தோழியுடன் சென்னைக்கு செல்வதாக கூறிச்சென்ற திவ்யா காணாமல் போனார். இதுபற்றி காடம்புலியூர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் பீரில் எலிமருந்து கொடுத்து திவ்யாவை தோழி சித்ரா கொலை செய்ததும், நண்பருடன் சேர்த்து காமாட்சிப்பேட்டை என்ற இடத்தில் கெடிலம் ஆற்றில் புதைத்து வைத்ததும் தெரியவந்துள்ளது. தான் காதலித்த நபரையே திவ்யாவும் காதலித்ததால் சித்ராவை திவ்யா கொலை செய்ததாக கூறியுள்ளார்.
விசாரணைக்காக காங்கேயக் குப்பத்திற்கு சித்ராவை காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். முந்திரி காட்டின் வழியே சென்ற போது காவல்துறையினரை ஏமாற்றிவிட்டு அருகில் இருந்த தரைக் கிணற்றில் சித்ரா குதித்துவிட்டார். 150 அடி ஆழம் கொண்ட அந்த கிணற்றை யாரும் பயன்படுத்தாத நிலையில் அதில் விஷவாயு இருக்கலாம் என்பதால் தீயணைப்புத் துறையினர் ஆய்வு செய்தனர். அதன்பின் சித்ராவை கிணற்றிலிருந்து மீட்கும் முயற்சிகள் நடைபெற்றது. முடிவில் சித்ரா உயிரிழந்த நிலையில் சடலமாக கிணற்றிலிருந்து மீட்கப்பட்டார்.