க்ரைம் டைரி (இன்று): குற்றச்சம்பவங்களின் தொகுப்பு!

க்ரைம் டைரி (இன்று): குற்றச்சம்பவங்களின் தொகுப்பு!
க்ரைம் டைரி (இன்று): குற்றச்சம்பவங்களின் தொகுப்பு!

பெண்ணைக் கொன்று நகை கொள்ளை :

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பெண்ணை கொன்று நகை களை கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேத்தாம்பட்டியை சேர்ந்த அம்பலமூர்த்தி என்பவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சாந்தி மகனுடன் வசித்து வந்த நிலையில், கடந்த 31ம் தேதி வீட்டில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். தாலி செயின் உள்பட 14 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில் திருமயத்தை சேர்ந்த சந்திரன், ராஜசேகர் ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீட்டில் புகுந்து செல்போன் திருடிய சிறுவர்கள்:

சென்னை அடுத்த குரோம்பேட்டையில் வீட்டில் புகுந்து செல்போன் திருடிய 2 சிறுவர்கள் உள்பட மூன்று பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர். பீகாரைச் சேர்ந்த மதன்குமார் என்பவர், தனது நண்பர்களுடன் குரோம்பேட்டை பகுதியில் மாடி வீட்டில் வசித்து வருகிறார். மதன்குமார் தனது நண்பர்களுடன் தூங்கிக்கொண்டிருந்த போது, மூன்று பேர் வீட்டில் புகுந்து செல்போனை திருடிச் சென்றுள்ளனர். சத்தம் கேட்டு எழுந்த வீட்டின் உரிமையாளர் கண்ணன், திருடர்களை பொதுமக்கள் உதவியுடன் மடக்கி பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். செல்போன் திருடிய கோவிந்தராஜ் உள்ளிட்ட இரண்டு சிறுவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

ரவுடி பாம் சரவணன் கைது :

திருவள்ளூரில் பதுங்கியிருந்த முக்கிய ரவுடி பாம் சரவணனை, புளியந்தோப்பு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த பாம் சரவணன் மீது 6 கொலை வழக்குகள் உள்பட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 2015ஆம் ஆண்டு ஜாமீனில் வெளிவந்த இவர், பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்துவந்துள்ளார். இந்நிலையில், ரகசிய தகவலின் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் பதுங்கியிருந்த அவரை, புளியந்தோப்பு காவல்துறையினர் கைது செய்தனர். எதிராளிகளை கொலை செய்வதற்கு பாம் சரவணன் திட்டமிட்டிருப்பதாக தெரியவந்துள்ள நிலையில், அது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் மீன் வியாபாரி வெட்டிக்கொலை :

சென்னையை அடுத்த மேடவாக்கத்தில் மீன் வியாபாரி ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். காந்திநகரில் வசித்து வந்த சீனிவாசன், நடைபயிற்சி முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அவரை வழிமறித்த அடையாளம் தெரியாத நபர்கள் பயங்கர ஆயுதங்களால் வெட்டிக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றனர். பள்ளிக்கரணை பகுதியில் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் இளைஞர்களை சீனிவாசன் கண்டித்ததாகவும், அதனால் ஏற்பட்ட பிரச்னையால் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்கு பதிந்துள்ள காவல்துறையினர் கொலையளிகளைத் தேடி வருகின்றனர்.

மாணவியை கர்ப்பிணியாக்கிய இளைஞர் கைது :

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே 11ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பிணியாக்கிய இளைஞரை காவல்துறையினர் போக்சோ ச‌ட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஓமலூர் அடுத்துள்ள தீவட்டிப்பட்டி கீழ்வீதியை சேர்ந்தவர் விஜயகுமார். 23 வயதான இவருக்கும் அவரது உறவினரான 11-ம் வகுப்பு மாணவியும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் மாணவி எட்டு மாதம் கர்ப்பமாக இருந்தது மருத்துவசோதனையில் தெரிய வந்தது. விஜயகுமார், மாணவியை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதனிடையே விஜயகுமாருக்கு வேறு பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட தகவல் அறிந்த மாணவியின் பெற்றோர், ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். விஜயகுமார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

மூதாட்டியை கொன்று நகை கொள்ளை :

கும்பகோணம் அருகே ஆடுதுறையில் மூதாட்டியை கொலை செய்து விட்டு 10 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆடுதுறை சேணிய செட்டித் தெருவில் வசித்து வந்தவர் 70 வயது மூதாட்டி ஹதீஜா பீவி. இவரது கணவர் இறந்து விட்ட நிலையில், மகனும் வெளிநாட்டில் பணியில் இருக்கிறார். இதனால் ஹதீஜா பீவி தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் நேற்றிரவு இருவர் ஹதீஜா வீட்டிற்கு சென்றுள்ளனர்.அப்போது அவர் கதவை திறந்து போது பலமாக தாக்கி கொலை செய்து, அவர் அணிந்திருந்த தங்க செயின், மோதிரம்,உள்ளிட்ட 10 சவரன் நகைகளை கொள்ளை அடித்துள்ளனர். பின்னர் வீட்டில் ‌இருந்த பீரோக்களையும் உடைத்துள்ளனர், ஆனால் எதுவும் இல்லாததால் கொல்லைப்புறமாக தப்பியோடியுள்ளனர். இச்சம்பவம் குறித்து திருவிடைமருதூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த மற்றும் அருகருகே வீடுகள் உள்ள பகுதியில் நிகழ்ந்த ‌இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தந்த முதியவர் :

விருதுநகரில் 7 வயது சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த 65 வயது முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் பர்மா காலனியை சேர்ந்த 7 வயது சிறுமி தெருவில் விளையாடும்போது அதே பகுதியை சேர்ந்த 65 வயது முதியவர் வெள்ளைப்பாண்டி தனது வீட்டிற்கு அழைத்து சென்று தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இந்நிலையில், இதுகுறித்து தனது பெற்றோரிடம் சிறுமி தெரிவித்ததை தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் விருதுநகர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரினை பெற்ற காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் முதியவர் வெள்ளைப்பாண்டி தெருவில் விளையாடும் ஏரளாமான சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் முதியவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு :

பாகிஸ்தானின் குவெட்டா நகரில் அமைந்துள்ள தேவாலயம் ஒன்றில் அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். நேற்று நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையை முடித்துக் கொண்டு பொதுமக்கள் வெளியே வந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் வெளியே வந்தவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டனர். இந்த திடீர் தாக்குதலில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து அங்கு வந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்தனர். துப்பாக்கிச் சூடு தொடர்பாக காவல்துற‌யினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடிபோதையில் வாகனம் ஓட்டிய பெண் :

சீனாவில் குடிபோதையில் பெண் ஒருவர் ஓட்டிச் சென்ற வாகனம் சாலையில் நின்றிருந்த வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. டோன்ங்சின் மாவட்டத்தில் பெண் ஒருவர் ஓட்டிச் சென்ற வாகனம், மினி வேன் மற்றும் ஐந்து இருசக்கர வாகனங்கள் மீது மோதியது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் அங்கிருந்து சிசிடிவியில் பதிவானது. இதன் அடிப்படையில் பெண்ணைப் பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்தப் பெண் மது அருந்தியது தெரியவந்தது. குடிபோதையில் விபத்தை‌ ஏற்படுத்திய குற்றத்துக்காக அந்தப் பெண்ணின் ஓட்டுநர் உரிமத்தை காவல்துறையினர் ரத்து செய்து, ஆறு மாதம் சிறை தண்டனை வழங்கினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com