“இந்த முறையாவது நேரில் ஆஜராகுங்கள்; இதுதான் கடைசி” - ஜடேஜா மனைவிக்கு நீதிமன்றம் சம்மன்!
போலீஸ்காரர் தாக்கிய வழக்கில் ஜடேஜாவின் மனைவி ரீவபா நேரில் ஆஜராகும்படி ஜாம்நகர் நீதிமன்றம் கடைசி முறையாக சம்மன் அனுப்பியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரீவபா. இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் ஜாம் நகரில் காரில் தனது தாயுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவர் கார், முன்னாள் சென்றுகொண்டிருந்த போலீஸ்காரர் ஒருவரின் பைக் மீது மோதியது. இதையடுத்து ரீவபா காரை விட்டு இறங்கி வந்தார். அப்போது அந்த காவலர், ரீவபாவை கடுமையாகத் தாக்கினார். இதில் ரீவபா காயமடைந்தார். இதையடுத்து தன்னை தாக்கிய காவலர் மீது ரீவபா காவல் நிலையத்தில் அளித்த புகாரில் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை ஜாம்நகர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வாக்குமூலம் பெறுவதற்காக நீதிமன்றம் பலமுறை சம்மன் அனுப்பியும் ரீவபா மற்றும் அவரது தாயார் இருவரும் ஆஜராகவில்லை. மேலும் ராஜ்கோட் போலீசாரும் நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பியுள்ளனர். அப்போதும்கூட இருவரும் ஆஜராகவில்லை. இந்த நிலையில் ரீவபா மற்றும் அவரது தாயார் நேரில் ஆஜராகும்படி ஜாம்நகர் நீதிமன்றம் கடைசி முறையாக அவர்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
இதையும் படிக்க: திடீரென மாயமான தங்க நகைகள்: சிசிடிவி காட்சிகளில் கடை உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி