‘புல்லி பாய்’, ‘சுல்லி டீல்ஸ்’ விவகாரம்: குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு நிபந்தனை ஜாமீன்
இஸ்லாமிய பெண்களின் புகைப்படத்தை மிகவும் மோசமான வகையில் சித்தரித்திருந்த புல்லி பாய் செயலி விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட நீரஜ் பிஷ்னோய் மற்றும் இணையவெளியில் பொதுவாக கிடைக்கும் பெண்களின் படத்தை கொண்டு ‘Deals of the Day’ என சொல்லிய சுல்லி டீல்ஸ் செயலி வடிவமைப்பாளர் ஓம்கரேஷ்வர் தாக்கூருக்கு மனிதாபிமான அடிப்படையில் டெல்லி நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
குற்றம்சாட்டப்பட்டவர்கள் முதல்முறை குற்றவாளிகள் என்பதாலும், அவர்கள் தொடர்ந்து சிறையில் இருப்பது அவர்களது நலனுக்கு கேடு விளைவிக்கும் எனக் கருதியும் நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் கொடுப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும் கடுமையான நிபந்தனைகளை குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் நீதிமன்றம் விதித்துள்ளது. சாட்சிகளை மிரட்டுவது மற்றும் ஆதாரத்தை சீர்குலைப்பது மாதிரியான செயல்களை செய்யக்கூடாது என நீதிமன்றம் சொல்லியுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் வெளிநாடுகளுக்கு செல்லக் கூடாது எனவும், பிணையில் இருக்கும்போது மீண்டும் இதே குற்றத்தை செய்யக் கூடாது எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.