காதலித்த இளம்பெண் அப்பா, அம்மா வேடிக்கை பார்க்க, ஆணவக் கொலை!
சொன்னதைக் கேட்காமல் காதலித்ததாக, அப்பா, அம்மா வேடிக்கை பார்க்க, இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலம், ஜஜ்ஜார் மாவட்டத்தில் உள்ளது சுர்ஹெடி கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் வேத்பால் (48). ராணுவத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்ற இவர், இப்போது டெல்லி போலீசில் பணியாற்றி வருகிறார். இவர் மனைவி மோனி தேவி. இவர்கள் மகள் வந்தனா (20). இவர், அருகிலுள்ள தாக்லா கிராமத்தைச் சேர்ந்த ராகுல் என்பவரை காதலித்து வந்தார். இருவரும் ஜாட் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். காதல் விவகாரம் வந்தனாவின் வீட்டுக்குத் தெரிய வந்ததும், காதலை கைவிடுமாறு கூறினர். மறுத்துவிட்டார் வந்தனா. இதையடுத்து இவரின் மாமா, ஜஸ்வந்த் (40) என்பவரும் காதலை கைவிட அறிவுறுத்தினார்.
கேட்காததால், குடும்பம் ஒன்று கூடி வந்தனாவை ஆணவக்கொலை செய்ய முடிவு செய்தது. அதன்படி, அப்பா, அம்மா வேடிக்கை பார்க்க, அவர்கள் கண்முன் வந்தனாவின் கழுத்தை நெறித்துக் கொன்றார் மாமா.
இதை தற்கொலை என்று சொல்லி தப்பிக்கப் பார்த்தது குடும்பம். ஆனால் உள்ளூர்க்காரர்கள் இதில் சந்தேகம் இருப்பதாகக் கூறியதை அடுத்து, போலீசார் விசாரித்தனர். விசாரணையில் இந்த ஆணவக்கொலை விவகாரம் வெளியே தெரிய வந்துள்ளது. இதையடுத்து வேத்பாலும் அவர் மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவான ஜஸ்வந்தை தேடி வருகின்றனர்.
குடும்பமே சேர்ந்து இளம் பெண்ணைக் கொன்ற சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.