போக்சோ வழக்கில் கட்டடத் தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை -நீதிமன்றம்
ஈரோட்டில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கட்டடத் தொழிலாளிக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளியான ராசு என்கிற சித்தராசு என்பவர் தனது வீட்டின் அருகே வசித்து வரும் 11 வயது சிறுமிக்கு சைக்கிள் ஓட்டுவதற்கு கற்றுத்தருவதாக கூறியுள்ளார். இதனையடுத்து சிறுமியை சைக்கிள் ஓட்ட அழைத்துச் சென்று மக்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் கட்டடத் தொழிலாளி ராசு என்கிற சித்தராசுவை போக்சோ வழக்கில் கைது செய்தனர். இதில் குற்றம் சாட்டப்பட்ட சித்தராசு மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மாவட்ட மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.50 ஆயிரம் நிவாரண தொகையை வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.