சென்னை ஐஐடியில் 45 நாய்கள் உயிரிழந்த விவகாரம் - நடவடிக்கை எடுக்கக்கோரி புகார்

சென்னை ஐஐடியில் 45 நாய்கள் உயிரிழந்த விவகாரம் - நடவடிக்கை எடுக்கக்கோரி புகார்
சென்னை ஐஐடியில் 45 நாய்கள் உயிரிழந்த விவகாரம் - நடவடிக்கை எடுக்கக்கோரி புகார்

சென்னை ஐ.ஐ.டி.யில் 45 நாய்கள் உயிரிழந்த விவகாரத்தில் பதிவாளர் மற்றும் ஊழியர்கள் மீது மிருகவதை தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்ககோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரைச் சேர்ந்த ஹரிஷ் விலங்குகள் நல ஆர்வலராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் ஹரிஷ் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், கடந்த 2020 ஆம் ஆண்டு சென்னை ஐ.ஐ.டி.யில் சுற்றித்திரிந்த 186 நாய்களில் 45 நாய்கள் உயிரிழந்ததற்கு உரிய பராமரிப்பு அளிக்கத் தவறிய பதிவாளர் ஜேன் பிரசாத் மற்றும் உடனிருக்கும் சில ஊழியர்களே காரணம் எனவும், அவர்கள் மீது மிருகவதை தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகாரில் தெரிவித்துள்ளார்.

புகார் அளித்தபின் விலங்குககள் நல ஆர்வலர் ஹரீஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில், "சென்னை ஐ.ஐ.டி வளாகத்திற்குள் இருந்த 186 நாய்கள் உரிய பராமரிப்பின்றி இருட்டறைக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்திருக்கிறது. சமீபத்தில் அதில் 45 நாய்கள் உயிரிழந்துள்ளது. மேலும் நாய்களின் உயிரிழப்புக்கு அவைகள் முறையாக பராமரிக்கப்படாமல், தகுந்த உணவளிக்காமல் இருந்ததே காரணம். அடைக்கப்படும்போது முழு ஆரோக்கியத்துடன் இருந்த நாய்களில் 45 நாய்கள் திடீரென உயிரிழக்க வேறெந்த காரணமும் இருக்க முடியாது. இருட்டறையில் அடைத்து வைக்கப்பட்டதால், சுதந்திரம் இல்லாமலும், பயத்தாலும் அவற்றிற்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது.

இது தொடர்பான வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தில் 45 நாய்கள் உயிரிழந்துள்ளதை சென்னை ஐ.ஐ.டி-யின் பதிவாளர் ஜேன் பிரசாத் ஏற்கெனவே குறிப்பிட்டு உறுதிபடுத்தியுள்ளார். 45 நாய்களின் உயிரிழப்பிற்கு சென்னை ஐ.ஐ.டி-யின் பதிவாளரான ஜேம் பிரசாத் மற்றும் அவருடன் இருக்கும் சில ஊழியர்களே பொறுப்பு. அவர்கள் மீது மிருகவதை தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கூறி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளோம்" என்று விலங்குகள் நல ஆர்வலர் ஹரிஷ் தெரிவித்துள்ளார்.

வாயில்லா பிராணிகளை ஒரே இடத்தில் அடைத்து வைக்கக்கூடாது எனவும், அது அவற்றின் இனப்பெருக்கத்தை பாதிக்கும் என்பது குறித்து மிருக நல வாரியம் ஏற்கெனவே அறிக்கை வெளியிட்டுள்ளதும், சென்னை ஐ.ஐ.டியில் நாய்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதற்கு விளக்கம் கேட்டு ஏற்கனவே விலங்குகள் நல வாரியம் சென்னை ஐ.ஐ.டி, சென்னை மாநகராட்சி மற்றும் காவல் ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com