தம்பி மனைவிக்கு தொல்லை தந்தவர் மீது புகார் அளித்தவர் வெட்டிக்கொலை!
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே காவல்நிலையத்தில் புகார் அளித்தவரை வீட்டிற்கே சென்று வெட்டிக்கொன்ற கொடூரம் நடந்துள்ளது.
பத்துகாடு கிராமத்தைச் சேர்ந்த சகாயராஜ் என்பவரின் மனைவி பிரியாவுக்கு லட்சுமணன் என்ற பைனான்சியர் தொலைபேசியில் பேசி தொல்லை தந்ததாக கூறப்படுகிறது. நேற்று மாலை பிரியாவின் வீட்டிற்குச் சென்று லட்சுமணன் பேச முற்பட்டுள்ளார். இதுதொடர்பாக சகாயராஜ், அவரது சகோதரர் அன்புரோஸ் மற்றும் உறவினர்கள் லட்சுமணனை நேரில் சென்று தட்டிக்கேட்டுள்ளனர்.
தொடர்ந்து சகாயராஜ், அன்புரோஸ் உள்ளிட்டோர் சேதுபாவா சத்திரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்நிலையத்தில் இருந்து திரும்பி வந்தவர்களை லட்சுமணன் தரப்பினர் தாக்க முற்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பிய சகாயராஜ் உள்ளிட்டோர் வீடு திரும்பினர்.
இந்நிலையில் நேற்றிரவு ஐந்து பேர் கொண்ட கும்பலுடன் வந்த லட்சுமணன் பிரியாவின் வீட்டிற்குச்சென்று, சகாயராஜை தேடியுள்ளார். சகாயராஜ் அங்கில்லாத நிலையில் அவரது சகோதரர் அன்புரோசை அந்தக் கும்பல் வெட்டிக் கொலை செய்தது. தடுக்க முற்பட்ட அன்புரோசின் மனைவி மற்றும் உறவினர்களும் காயம் அடைந்தனர். அன்புரோசை கொன்ற லட்சுமணன் உள்ளிட்ட கும்பலை காவல்துறையினர் தேடிவருகிறார்கள்.