“சந்தேகம் வரக்கூடாதுனு என்னையும் அடிக்க சொன்னேன்” - நகைக்காக கல்லூரி மாணவர் போட்ட ஸ்கெட்ச்
காரைக்குடி சூடாமணி புறத்தில், வீடு புகுந்து கத்தியை காட்டி மிரட்டி, 17 சவரன் தங்க நகையை கொள்ளையடித்துச் சென்ற கல்லூரி மாணவர் உட்பட 4 பேர் காரைக்குடி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சூடாமணி புரத்தில் வசிப்பவர் லதா. தனது தாயுடன் வசித்து வரும் இவரது வீட்டின் மேல் மாடியில் உள்ள இரண்டு அறைகளில் கல்லூரி மாணவர் உட்பட 8 பேர் தங்கி பல்வேறு வேலைகளுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் நேற்றிரவு திடீரென வீட்டிற்குள் புகுந்த முகமூடி அணிந்த நான்கு பேர் அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்த கல்லூரி மாணவனை கட்டையால் தாக்கியும் லதா மற்றும் அவரது தாயாரை பட்டாக்கத்தி மற்றும் கத்தியை கொண்டு கையில் கீறியும் மிரட்டியும் அவர்கள் அணிந்திருந்த 17சவரன் நகையை கொள்ளையடித்துவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.
இது குறித்து லதா காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பெற்ற ஆய்வாளர் ராஜ்குமார், சந்தேகத்தின் பேரில் கல்லூரி மாணவரிடம் விசாரணை மேற்கொண்டார். தீவிர விசாரணையில், கல்லூரி மாணவர் பூபதி பாண்டியன், லதாவிற்கு உதவி செய்வதுபோல் நடித்து அவரிடம் இருக்கும் நகைகளை தெரிந்து கொண்டு தனது நண்பர்கள் உதவியுடன் கொள்ளையடித்தது தெரியவந்தது. மேலும்,போலீஸ் விசாரணையில் தான் மாட்டிவிடக்கூடாது என்பதால் தன்னையும் தாக்க சொல்லி நாடகமாடியது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து பூபதி பாண்டியன் மற்றும் அவரது கூட்டாளிகளான ஆனந்த், சுதன், ஐயப்பன் ஆகிய நால்வரையும் கைது செய்த ஆய்வாளர் ராஜ்குமார், கொள்ளையர்களிடமிருந்து 17 சவரன் நகையையும் பறிமுதல் செய்தார். பின்பு அவர்களிடம் மேல் விசாரணைக்கு பிறகு காரைக்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார். கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவன் கொள்ளை செயலில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.