விழுப்புரம்: கல்லூரி மாணவன் அடித்துக் கொலை; உறவினர்கள் மறியல்

விழுப்புரம்: கல்லூரி மாணவன் அடித்துக் கொலை; உறவினர்கள் மறியல்

விழுப்புரம்: கல்லூரி மாணவன் அடித்துக் கொலை; உறவினர்கள் மறியல்

விழுப்புரம் அருகே கல்லூரி மாணவன் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். எனவே குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் டி. எடையார் கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி என்பவரின் மகன் அருண் (21). இவர், விழுப்புரம் அறிஞர் அண்ணா கலைக் கல்லூரியில் பி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவருடைய இருசக்கர வாகனத்தை அதே பகுதியைச் சேர்ந்த சரத் (20) கீர்த்தி (18) சத்தியன் (17) வீரமணி (18) ஆகியோர் திருடி உள்ளனர்.

இவர்கள் இருசக்கர வாகனங்களை திருடுவதோடு கஞ்சா போதை பழக்கம் மற்றும் கஞ்சா விற்பனை செய்பவர்கள் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் அருண், இருசக்கர வாகனம் திருட்டு தொடர்பாக நால்வரிடமும் வாக்குமூலத்தை செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இதையடுத்து தனது இரு சக்கர வாகனத்தை தரவில்லை என்றால் காவல் நிலையத்தில் கொடுத்து விடுவேன் எனக் கூறியுள்ளார்.

இதனை அறிந்த சரத், கீர்த்தி, சத்தியன், வீரமணி ஆகிய நால்வரும் நேற்றிரவு இருசக்கர வாகனத்தை தருவதாக அருணை அழைத்துச் சென்று அடித்துக் கொலை செய்து அருகிலுள்ள பனப்பாக்கம் ஏரியில் உள்ள கிணற்றில் வீசிச் சென்று விட்டதாக தெரிகிறது. இதனையடுத்து கிராமத்திற்கு வந்த சத்தியன் போதையில் உளறியுள்ளார். இதைத்தொடர்ந்து கிராம மக்கள் ஒன்று திரண்டு அனைவரையும் பிடித்து திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இதையடுத்து அருணின் உடலை கிணற்றிலிருந்து மீட்ட திருவெண்ணெய்நல்லூர் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர், பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி அருணின் உறவினர்கள் திருக்கோவிலூர் திருவெண்ணைநல்லூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு வந்த திருவெண்ணைநல்லூர் போலீசார், பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com