பேசுவதை நிறுத்தியதால் மாணவியின் கழுத்தறுத்த இளைஞர்
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவியை, விடுதி வாயிலிலேயே இளைஞர் ஒருவர் கத்தியால் கழுத்தை அறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி பகுதியைச் சேர்ந்த மாணவி லாவண்யா. இவர் அண்ணாமலை பல்கலைக்கழக விடுதியில் தங்கி முதுநிலை பட்டப்படிப்பு பயின்று வருகிறார். வழக்கம்போல கல்லூரிக்கு செல்வதற்காக விடுதியில் இருந்து வெளியே வந்த மாணவியை, இளைஞர் ஒருவர் வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியின் கழுத்தை அறுப்பதற்காக அந்த இளைஞர் முயற்சித்துள்ளார். அதனைத் தடுக்க முயன்ற மாணவிக்கு கை, முகம், கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் பலத்த வெட்டுக் காயங்கள் ஏற்பட்டுள்ளன.
அங்கிருந்து தப்ப முயன்ற இளைஞரை பிடித்த பொதுமக்கள், கடுமையாகத் தாக்கி உள்ளனர். கொலை செய்ய முயன்ற இளைஞர் நாட்றாம்பள்ளியைச் சேர்ந்த நவீன்குமார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மாணவியும், நவீன்குமாரும் நண்பர்களாக பழகி வந்ததாகவும், திடீரென நவீன்குமருடன் பேசுவதை மாணவி நிறுத்திக் கொண்டதால் அவர் தாக்குதலில் ஈடுபட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். படுகாயமடைந்த இளைஞரும், தாக்குதலுக்கு ஆளான மாணவியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.