கோவை: நிலம் வாங்க ஆசைப்பட்டு ரூ.30 லட்சத்தை இழந்த ஆசிரியர் - பெண் உள்பட இருவர் கைது
கோவையில் வேறு ஒருவரது நிலத்தை காட்டி அதை கிரயம் செய்து கொடுப்பதாகக் கூறி 30 லட்சம் ரூபாயை மோசடி செய்ததாக இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் சிட்ராவைச் சேர்ந்தவர் அரசு பள்ளி ஆசிரியர் கார்த்திக் பிரபு. சொந்த வீடு கட்ட விரும்பிய இவர், வீட்டு மனைகளுக்கான தேடலில் இருந்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஆண்டு கார்த்திக் பிரபுக்கு வந்த டெலி காலிங் அழைப்பில், கோவை, ராமநாதபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் CUBE SQUARE CONSTRUCTION என்ற தங்கள் கட்டுமான நிறுவனம் வீடுகள் மற்றும் வீட்டு மனைகளை வாங்கி தரும் தொழில் செய்து வருவதாகக் கூறியுள்ளனர்.
இதனையடுத்து அந்த நிறுவனத்தை அணுகிய கார்த்திக் பிரபுக்கு, ஜெகநாதன் மற்றும் கலைவாணி ஆகியோர் CUBE SQUARE CONSTRUCTION நிறுவனத்தின் உரிமையாளர்கள் என அறிமுகமாகியுள்ளனர். இந்த நிலையில் ஜெகநாதன் மற்றும் கலைவாணி ஆகியோர் காளப்பட்டி நேரு நகரில் இருந்த வீட்டுமனை ஒன்றை கார்த்திக் பிரபுவிடம் காண்பித்துள்ளனர். இதனை அடுத்து வீட்டுமனைக்கான முன்பணமாக 30 லட்சம் ரூபாயை ஜெகநாத்திடம் கார்த்திக் பிரபு கொடுத்ததாக தெரிகிறது.
இதைத் தொடர்ந்து பணத்தை பெற்றுக் கொண்ட ஜெகநாதன் அந்த வீட்டு மனையை பத்திரப்பதிவு செய்து தராமல் இழுத்து அடித்ததாக தெரிகிறது. இதனால் சந்தேகம் அடைந்த கார்த்திக் பிரபு தொடர்ந்து அவர்களிடம் பத்திரப்பதிவு செய்து கொடுங்கள் அல்லது பணத்தை திருப்பி கொடுக்குமாறு கேட்டுள்ளனர். நாளடைவில் அவர்கள் வேறு ஒருவர் நிலத்தை காட்டி முன்பணம் பெற்றுக்கொண்டு மோசடி செய்தது கார்த்திக் பிரபுக்கு தெரியவந்துள்ளது.
இந்நிலையில், கலைவாணி மற்றும் ஜெகநாத் ஆகியோரை சந்தித்து பணத்தை திருப்பிக் கொடுக்குமாறு கேட்டுள்ளார். அப்போது கார்த்திக் பிரபுவிற்கு அவர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனையடுத்து கார்த்திக் பிரபு ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து இருதரப்பையும் அழைத்து விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், மோசடியில் ஈடுபட்டதாக ஜெகநாதன் மற்றும் கலைவாணி ஆகியோரை கைது செய்தனர்.
இந்த மோசடி நிறுவனம் வேறு யார் யாரிடம் எல்லாம் மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.