கோவை: தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவி; தலைமறைவாகி இருந்த ஆசிரியர் போக்சோவில் கைது
கோவையில் ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக உயிரிழந்த மாணவியின் பெற்றோர் குற்றம் சாட்டியிருந்த நிலையில், தொடர்புடைய ஆசிரியர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவையை சேர்ந்த 17 வயது மாணவியொருவர் தனியார் பள்ளியொன்றில் 12ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 6 மாதத்திற்கு முன்பு பள்ளிக்கு செல்ல விரும்பவில்லை எனக்கூறி மாணவி மாற்றுச் சான்றிதழ் பெற்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து வேறு பள்ளியில் சேர்க்க பெற்றோர் முயன்று வந்த நிலையில், வீட்டில் மாணவி இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று மாலை வீட்டில் தனியாக இருந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த உக்கடம் போலீசார், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாணவியின் தற்கொலைக்கு, அவர் ஏற்கனவே படித்த பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் மிதூன் சக்கரவர்த்தி தான் காரணம் என்றும், அவர் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாகவும் பெற்றோர் தரப்பில் கூறப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக கோவை அனைத்து மகளிர் போலிசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
தொடர்புடைய செய்தி: பாலியல் தொல்லையால் மாணவி தூக்கிட்டு தற்கொலை? - ஆசிரியர் மீது பெற்றோர் புகார்
குற்றம்சாட்டப்பட்ட அந்த ஆசிரியர் மிதூன் சக்கரவர்த்தி தலைமறைவாகி இருந்ததாக கூறப்பட்ட நிலையில், காவலர்கள் தற்போது அவரை கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவரிடம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
*****
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல.
மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்: 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)