கோவை: இந்து அறநிலையத் துறையில் வேலை வாங்கித் தருவதாக கோடிக் கணக்கில் மோசடி

கோவை: இந்து அறநிலையத் துறையில் வேலை வாங்கித் தருவதாக கோடிக் கணக்கில் மோசடி
கோவை: இந்து அறநிலையத் துறையில் வேலை வாங்கித் தருவதாக கோடிக் கணக்கில் மோசடி

இந்து சமய அறநிலையத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்த 6 பேரை கோவை மாவட்ட காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த சந்தானகிருஷ்ணன் என்பவர் தனது மகளுக்கு அரசு வேலை வாங்குவதற்காக திண்டுக்கல்லைச் சேர்ந்த காந்திராஜ் என்பவரது மகன் சரவணகுமார் என்பவரிடம் விசாரித்தாக தெரிகிறது. அப்போது சரவணகுமார், தான் தமிழ்நாடு இந்து சமய அறநிலைத் துறையில் இளநிலை உதவியாளராக பணி புரிந்து வருவதாகவும்,; இந்து சமய அறநிலையத் துறையில் அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

இந்நிலையில், தனது கூட்டாளிகளான ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஜவகர் பிரசாத் (29), தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அன்பு பிரசாத் (39), தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த சரவணகுமார் (33), கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் (33), பெரியநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த சுரேந்திரன் (34) மற்றும் சுதாகர் (37) ஆகிய நபர்களுடன் சேர்ந்து, சந்தான கிருஷ்ணனிடம் இருந்து ரூ.21 லட்சம் பணத்தை பெற்றுக் கொண்டு போலியான பணி நியமன ஆணைகளை தயாரித்து ஏமாற்றி மோசடி செய்துள்ளனர்.

இதையடுத்து ஏமாற்றப்பட்டதை அறிந்த சந்தான கிருஷ்ணன், இதுகுறித்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவில் வழக்குப் பதிவு செய்து மூன்று தனிப்படைகள் அமைத்து மோசடி செய்த நபர்களை தேடிவந்தனர். இந்த நிலையில் இன்று (04.02.2023) மேற்கண்ட நபர்களை கைது செய்து அவர்களிடம் விசாரணை செய்தனர்.

அதில், அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி கோவை மாவட்டம் மட்டுமின்றி பிற மாவட்டங்களிலும் இதுபோல் பலரை ஏமாற்றி பல கோடி ரூபாய் மோசடி செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து 6 நபர்களையும் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com