தகாத உறவு: பெண் சப்-இன்ஸ்பெக்டரை கொன்றது எப்படி? இன்ஸ்பெக்டர் விளக்கம்!
பெண் சப்- இன்ஸ்பெக்டரை கொன்று உடலைத் துண்டு துண்டாக வெட்டியது எப்படி என்பது பற்றிய தகவல் இப்போது வெளியாகியுள்ளது.
மும்பை கல்யாண் போலீஸ் ஸ்டேஷனில் சப்இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் அஸ்வினி (37). இவரது வீடு சோலாப்பூரில் இருக்கிறது. கணவர் அங்கு வேலை பார்ப்பதால், நவி மும்பையில் தனியாக வீடு எடுத்து வசித்தார். இவர் வேலை பார்த்த அதே ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக இருந்தவர் அபய் குருண்ட்கர். இவருக்கும் அஸ்வினிக்கும் 2011-ம் ஆண்டு காதல் ஏற்பட்டது. இருவருக்கும் தனித் தனி குடும்பம் இருந்தும், இவர்கள் காதல் தொடர்ந்தது. இது, ஸ்டேஷனில் அரசல் புரசலாக சிலருக்கு தெரிய வந்தது.
இந்நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு திடீரென்று அஸ்வினி காணாமல் போனார். அவர் எங்கு போனார், என்ன ஆனார் என்று தெரியவில்லை. போலீசார் ’அஸ்வினி ஏன் ஆபிஸ் வரலை?’ என்று அவர் கணவருக்கு போன் செய்தனர். அவர் அங்குதான் இருக்கிறார். ஊருக்கு வரவில்லை என்றார் கணவர். அடுத்தடுத்த நாட்களிலும் அவரைக் காணாததால், அஸ்வினியின் கணவரும் சகோதரர் ஆனந்தும் போலீசில் புகார் கூறினார். போலீஸ், தேடுதல் வேட்டையில் இறங்கியது. சந்தேகத்தின் அடிப்படையில் 4 பேரை கைது செய்தது. விசாரித்தால் பல திடுக் கதைகள் வெளியாயின.
அஸ்வினியும் இன்ஸ்பெக்டர் அபயும் காதலித்து வந்தனர். அஸ்வினியிடம் இருந்து சுமார் ரூ.50 லட்சம் வரை கடனாக வாங்கியிருக்கிறார் அபய். இதற்கிடையை நாம் திருமணம் செய்துகொள்ளலாம் என்று கேட்டிருக்கிறார் அஸ்வினி. சம்மதித்தார் அபய். தொடர்ந்து அஸ்வினி நச்சரித்துக்கொண்டே இருக்க, அவரைத் தீர்த்துக் கட்ட முடிவு செய்தார். இதற்காக தனது நண்பர் குந்தன் பண்டாரி, முன்னாள் மத்திய அமைச்சர் ஏக்நாத் காட்சேயின் உறவினர் ராஜூ பட்டேல் ஆகியோரின் உதவியை நாடினார். அவர்களும் ஒத்துழைப்பதாகக் கூறினர்.
பயந்தரில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்தார் அஸ்வினியை. இன்ஸ்பெக்டரின் குடும்பத்தினர் வேறு ஊரில் வசிக்கின்றனர். வந்தார் அவர். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. கிரிக்கெட் மட்டையால் அஸ்வினியின் பின் மண்டையில் அடித்தார். ரத்தம் தெறிக்க விழுந்தார் அவர். பிறகு அடித்துக் கொன்றார். ரம்பம் கொண்டு அவர் தலை, உடல் என தனித் தனி துண்டாக வெட்டினார். தனித் தனி பேக்கில் கட்டி ஃபிரிட்ஜில் வைத்தார். மறுநாள் இதை டிரங்க் பெட்டியில் வைத்து காரில் கொண்டு சென்றனர். வாசியில் உள்ள பாலத்தில் இருந்து ஆற்றில் அந்த பெட்டியை வீசிவிட்டு ஒன்றும் தெரியாதது போல் வீட்டுக்கு வந்துவிட்டனர். சில மணி நேரம் கழித்து அந்த டிரெங் பெட்டி கரை ஒதுங்கி இருக்கிறதா, மிதந்து செல்கிறதா? என்பதையும் பார்க்க வந்துள்ளனர். அது இல்லை என்று தெரிந்ததும் நிம்மதியாக வீட்டுக்குச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் இப்போது வெளியே வந்திருக்கிறது.
பல்வேறு கட்ட விசாரணைக்கு பிறகு இந்த சம்பவத்தை விவரித்திருக்கிறாராம் அபய். போலீசார் அந்த டிரெங்கு பெட்டியை தேடி வருகின்றனர்.