திருட வந்ததாக கருதி சரமாரியாக தாக்கிய பொதுமக்கள்: திருச்சியில் கேரள இளைஞர் உயிரிழப்பு

திருட வந்ததாக கருதி சரமாரியாக தாக்கிய பொதுமக்கள்: திருச்சியில் கேரள இளைஞர் உயிரிழப்பு
திருட வந்ததாக கருதி சரமாரியாக தாக்கிய பொதுமக்கள்: திருச்சியில் கேரள இளைஞர் உயிரிழப்பு

திருச்சி மாவட்டத்தில் திருடன் என நினைத்து பொதுமக்கள் தாக்கியதில் கேரள இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் அல்லூர் கிராமத்தில் அண்மைக் காலமாக தொடர்ச்சியாக திருட்டுச் சம்பவங்கள் அரங்கேறி வந்ததாகத் தெரிகிறது.
அதன் தொடர்ச்சியாக நேற்றும் புதுக்கோட்டை- திருச்சி மாவட்ட எல்லையில் உள்ள அவூர் கிராமத்தில், விவசாயி பழனிச்சாமி வீட்டின் கதவு பூட்டை உடைத்து, 35 சவரன் நகை மற்றும் ₹4.75 லட்சத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இந்தத் தொடர் திருட்டுச் சம்பவங்களால் அப்பகுதி மக்களிடையே ஒரு வித அச்சம் குடிகொண்டிருந்தது. அதன் காரணமாக அல்லூர் கிராமத்தில் திருட்டுச் சம்பவங்களைத் தடுக்க கிராம மக்கள் குழு அமைத்து கண்காணித்து வருகின்றனர்.

(சிகிச்சைப் பலன்றி உயிரிழந்தவர்)

இந்நிலையில், நேற்று அப்பகுதியில் வசித்து வரும் வெங்கடேசன் என்பவரது வீட்டின் கதவை 2 மர்ம நபர்கள் தட்டியதாகவும், சத்தம் கேட்டு கதவை திறந்து பார்த்தபோது அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடியதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் அவர்களை திருடர்கள் எனக் கருதிய மக்கள் அவர்களை பிடிக்க முயன்றனர். அதில் ஒருவர் தப்பி ஓடிய நிலையில், மற்றொரு நபர் அங்கு கிடந்த மரக்கட்டையால், பொதுமக்களையும், அங்கிருந்த இருசக்கர வாகனங்களையும் தாக்கியதோடு கத்தியை காட்டியும் மிரட்டியதாகச் சொல்லப்படுகிறது.

இந்தத் தாக்குதல் சம்பவத்தில் சாம்பசிவம், ராதா ஆகியோர் படுகாயம் அடைந்த நிலையில், 7 இரு சக்கர வாகனங்களும் சேதமடைந்தன. இதனையடுத்து பதில் தாக்குதல் நடத்திய பொதுமக்கள் அவரை மடக்கிப் பிடித்தனர். பொதுமக்கள் நடத்திய தாக்குதலில் அவரும் படுகாயமடைந்தார். இதனைத்தொடர்ந்து, படுகாயமடைந்த நபரை கயிற்றால் கட்டி சரக்கு வாகனத்தில் ஏற்றிய பொதுமக்கள் அவரை சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதனிடையே , தப்பி ஓடிய மற்றொரு நபரையும் வளைத்து பிடித்த மக்கள் அவரை ஜீயபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்து சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தனர். 

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட திபு என்னும் நபர் சிகிச்சைப் பலன்றி உயிரிழந்தார். இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் வீட்டுக்கதவை தட்டிய நபர்கள் கேரள மாநிலம் கிருஷ்ண கிருபா பகுதியைச் சேர்ந்த அரவிந்த் (24), திபு (25) என்று தெரிய வந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக ஜீயபுரம் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு தகவலாக மர்ம நபர்கள் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்ததாகவும், அவர்கள் அங்கிருந்த குழுவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது மொழிப் பிரச்னையால் அவர்கள் கூறிய வார்த்தைகளை தவறாக புரிந்துகொண்ட மக்கள் இந்தத் தாக்குதல் சம்பவத்தில் ஈடுப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

அவர்கள் திருடர்களாக என்பது தற்போது வரை உறுதிச்செய்யபடாத நிலையில், அங்கு ஒருவர் உயிரிழந்துள்ளார். இது மனித உரிமைகளுக்கு மீறலாகவே பார்க்கப்படுகிறது. போலீஸ் விசாரணையில் முழு விவரம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com