மது குடித்துக் கொண்டே அழுத குழந்தைக்கு சூடுவைத்த கொடூரம் - தாய் வளர்ப்பு தந்தை கைது
மது குடித்துக் கொண்டே பெற்றக் குழந்தைக்கு சூடு வைத்த தாய் மற்றும் வளர்ப்பு தந்தை ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை அடையார் அடுத்த சாஸ்திரி நகர், 7 சந்தையைச் சேர்ந்தவர் பானு (29), இவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக முதல் கணவர் விமல்ராஜ் பிரிந்து சென்ற நிலையில், ஏசி மெக்கானிக்கான ஜெகன் ஜோஸ் (37) என்பவருடன் வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் முதல் கணவருக்கு பிறந்த இரண்டரை வயது குழந்தை ஏஞ்சலுக்கு உடல் நிலை சரியில்லை என பானு தனது தாயார் கன்னியம்மாளிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து கன்னியம்மாள் அங்கு வந்து பார்த்த போது குழந்தையின் முதுகில் சிராய்ப்பு காயம், கண், நெற்றி, கை, கால்களில் சிகரெட்டால் சூடு வைத்த காயம் இருந்துள்ளது.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் குழந்தையை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். இது குறித்து மருத்துவர்கள், சாஸ்திரி நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பேரில் குழந்தையின் தாய் மற்றும் தாயின் இரண்டாவது கணவர் ஆகிய இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.
விசாரணையில் இருவரும் ஒன்றாக சேர்ந்து மது அருந்தும் பழக்கம் கொண்டவர்கள் என்பதும் அப்போது குழந்தை அழும் போதெல்லாம் சூடு வைத்ததாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து இருவரையும் அடையார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சைதாப்பேட்டை சிறையில் அடைத்தனர்.