சிறுமியை பலாத்காரம் செய்த முதியவர்.. கருக்கலைப்பு செய்த போலி டாக்டர் கைது
ஆம்பூர் அருகே 14 வயது சிறுமிக்கு கருக்கலைப்பு செய்த போலி டாக்டர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தலைமறைவான வாழைப்பழ வியாபாரியை போலீசார் தேடிவருகின்றனர்.
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த உமராபாத் பகுதியை சேர்ந்தவர் சலீம் (வயது 65). இவர் அதே பகுதியில் வாழைப்பழ வியாபாரம் செய்து வந்துள்ளார். இவருக்கு ஷாகீரா என்ற மனைவியும், 9 பிள்ளைகளும் உள்ளனர். இதில் 5 பேருக்கு திருமணம் நடந்துள்ளது. மீதமுள்ள 4 பேருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
இந்நிலையில் சலீம் அதே பகுதியில் உள்ள அவரது தூரத்து உறவினரான ஒருவர் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். உறவினர் வேலைக்கு செல்லும் நேரத்தை பார்த்து வீட்டில் தனியாக இருந்த அவரது மகளை(வயது 14) பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் சலீம்.
இந்தநிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன் தீடீரென சிறுமிக்கு வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. பின்னர் அவரது பெற்றோர் அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு (போலி மருத்துவர் என தெரியாமல்) அழைத்து சென்று ஜெயபால் என்பவரிடம் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இருப்பினும் வயிற்றுவலி குறையாததால் மருத்துவர் ஸ்கேன் எடுத்து வரச்சொல்லி இருக்கிறார். இதனையடுத்து சிறுமி 6 மாத கர்ப்பமாக உள்ளதாக தெரிவித்த ஜெயபால், உடனடியாக சிறுமிக்கு அவசர, அவசரமாக கருக்கலைப்பும் செய்துள்ளார்.
இது குறித்து சிறுமியின் தந்தை உமராபாத் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். அரசு விதிகளை மீறி கருக்கலைப்பு செய்த போலி மருத்துவர் ஜெயபால் மற்றும் பேர்ணம்பட்டு பகுதியை சேர்ந்த ஜெயலட்சுமி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தப்பியோடிய வாழைப்பழ வியாபாரி சலீமை போலீசார் தேடி வருகின்றனர்.