சென்னையில் வீட்டில் இறந்து கிடந்த குழந்தை: கொலையா...?
சென்னையில் ஒன்றரை வயது சிறுமி சந்தேகமான முறையில் வீட்டில் இறந்து கிடந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை டிபி சத்திரம் பகுதியில் உள்ள நான்கு அடுக்கு குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் பிரியங்கா. இவரது முதல் கணவர் வேலு. இவர் விட்டுச் சென்றதால் 2-வதாக தினேஷ் என்பவரை பிரியங்கா திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள்.
இந்நிலையில் 2-வது கணவர் பிரிந்து சென்றதால் மீண்டும் முதல் கணவர் வேலுவுடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார் பிரியங்கா. 2-வது கணவரின் குழந்தைகளும் இவர்ளுடனே இருக்கிறது. இந்நிலையில் பிரியங்காவின் ஒன்றரை வயது குழந்தை நேற்றிரவு வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பிரியங்கா, அக்கம்பக்கத்தினருடன் சேர்ந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் குழந்தையை சேர்த்தார். ஆனால் குழந்தை இறந்து விட்டது. குழந்தையின் உடலில் காயங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து டிபி சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
பிரியங்காவின் முதல் கணவர் வேலு தான் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொன்றுவிட்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டினர். மேலும் வேலுவையும் பிடித்து டிபி சத்திரம் காவல் நிலையத்தில் உறவினர்கள் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக பிரியங்காவின் தாயார் ஏகவல்லி கூறுகையில், "வேலு அந்தக் குழந்தைக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும் இதனை பிரியங்கா கண்டித்ததாகவும்" கூறியுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து டிபி சத்திரம் போலீசார் கூறுகையில், "குழந்தை இறந்தது சந்தேக மரணம் என்ற அடிப்படையில் விசாரணை நடத்தி வருகிறோம். வேலு, பிரியங்கா இருவரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகிறோம். குழந்தை உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகுதான் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்"என்றனர்.