குழந்தை திருமணம்: சிதம்பரம் கோவில் தீட்சிதர் உட்பட 6 பேர் மீது வழக்கு – ஒருவர் கைது
8 ஆம் வகுப்பு மாணவிக்கு திருமணம் செய்து வைத்த சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் ஆறு பேர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் ஒருவரை கைது செய்து 5 பேரை தேடி வருகின்றனர்.
சிதம்பரம் கோவில் தீட்சிதர்கள் சட்டத்துக்கு புறம்பாக சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைப்பதாக தொடர்ந்து சர்ச்சை இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் திருமணம் செய்து வைத்ததாக சமூக நலத்துறை மூலமாக கடலூர் காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து புகாரின் பேரில் போலீசார் குழந்தை திருமண தடை சட்டத்தின் படி 8 ஆம் வகுப்பு படிக்கும் போது சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த குற்றத்திற்காக சிறுமியின் தந்தை மற்றும் தாய் மற்றும் மாப்பிளை விட்டார் உட்பட ஆறு பேர் மீது வழக்குப் பதிவு செய்து சிறுமியை திருமணம் செய்த மாப்பிள்ளையின் அண்ணன் சூர்யா என்ற தீட்சிதரை கைது செய்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து சிறுமியின் தாய் தந்தை, மாப்பிள்ளை அவரது தாய் தந்தை என ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில், கடந்த மாதம் இதேபோல் சிறுமி ஒருவருக்கு திருமணம் செய்து வைத்த வழக்கில் மூன்று தீட்சிதர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.