3 வயது குழந்தை கடத்தப்பட்ட சம்பவம்: கடத்தலில் ஈடுபட்ட சிறுவனின் பெற்றோர் கைது
சென்னை தண்டையார்பேட்டையில் 3 வயது குழந்தையை கடத்தப்பட்ட சம்பவத்தில் கடத்தலில் ஈடுபட்ட சிறுவனின் பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் இலியாஸ். இவரது மகன் முகமது சாது கடந்த 25ஆம் தேதி மதியம் தனது வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தபோது, திடீரென மாயமானான். இதையடுத்து அதிர்ச்சியடைந்த முகமது சாதுவின் பெற்றோர் ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் ஒருவர் சைக்கிளில் குழந்தையை கடத்திச் சென்றது தெரியவந்தது. அதன்மூலம் விசாரணை நடத்திய காவல்துறையினர் 24 மணி நேரத்தில் குழந்தையை மீட்டனர். கடத்தலில் ஈடுபட்ட 14 வயது சிறுவனை கைது செய்து காவல்துறையினர் கெல்லீஸ் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சிறுவனை ஒப்படைத்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் திடீர் திருப்பமாய் சிறுவனின் பெற்றோரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். குழந்தை கடத்தலுக்கு துணை போனது, அடைக்கலம் கொடுத்தது என்பன உள்ளிட்ட 3 பிரிவுகளில் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.