காப்பகம் மூலம் குழந்தை கடத்தி விற்பனை: விசாரணையில் அம்பலம்
ராமநாதபுரத்தில் குழந்தையை கடத்தி தனியார் காப்பகம் மூலம் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 4 லட்சம் ரூபாய்க்கு விலை பேசப்பட்ட குழந்தை தற்போது மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் அரண்மனை பகுதியில் ஆதார் டிரஸ்ட் என்ற தனியார் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கு குழந்தை ஒன்றை விற்பனை செய்வதற்காக ரூபாய் 4 லட்சம் வரை பேரம் பேசப்படுவதாக மனித கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து ஆதார் டிரஸ்ட்டில் குழந்தைகள் நல அமைப்பினர் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு பிறந்து ஒருமாதமே ஆன பச்சிளம் குழந்தை ஒன்று தொட்டிலில் கிடந்தது. உடனே அதிகாரிகள் இதுகுறித்து அங்குள்ளவர்களிடம் விசாரணை செய்தனர்.
விசாரணையில் 1 மாத குழந்தையை ஆட்டோ ஓட்டுநர் கதிரேசன் என்பவர் இங்கு வந்து கொடுத்தது தெரியவந்தது. அந்த குழந்தையை மீட்ட போலீசார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது திருடப்பட்ட குழந்தையா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குழந்தையை இங்கு கொண்டுவந்து கொடுத்த ஆட்டோ டிரைவர் கதிரேசனையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.