திருவொற்றியூரில் 4 வயது குழந்தையை பாலியல் கொடுமை செய்த இளைஞரை பொதுமக்கள் அடித்து உதைத்தனர்.
சென்னை திருவொற்றியூர் அடுத்த தாங்கல் பகுதியை சேர்ந்த தம்பதி நூர் முகமது-மும்தாஜ். இவர்களுக்கு எல்கேஜி படிக்கும் 4 வயது பெண் குழந்தை உள்ளது. வீட்டின் வெளியில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை, திடீரென காணாமல் போனது. இதையடுத்து அக்கம் பக்கத்தில் தேடியும் குழந்தை கிடைக்கவில்லை. குழந்தை கடத்தப்பட்டிருக்கலாம் என நினைத்த பெற்றோர், உறவினர்களுடன் சேர்ந்து தேடி வந்தனர். இதற்கிடையே ஷெரீப் என்பவர் திருவொற்றியூர் கடற்கரை பகுதியில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது குழந்தை ‘என்னை விடுங்கனு அழுக’, ஒரு இளைஞர் பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதைக்கண்ட ஷெரீப், அந்த இளைஞரிடம் இருந்து குழந்தையை மீட்டுள்ளார். சற்று நேரத்தில் அங்கு கூடிய அக்கம், பக்கத்து மக்கள் இளைஞரை மடக்கிப் பிடித்து, அடித்து உதைத்தனர். பின்னர் அவரிடம் விசாரித்ததில், அவர் செங்கல்பட்டு சிங்கப் பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அத்துடன் திருவொற்றியூர் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்திருப்பதும் தெரிந்தது. இதையடுத்து குழந்தை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த இளைஞர் காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
குழந்தையின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், அந்த இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.