உதவி செய்துவிட்டு பாலியல் வன்கொடுமை: தாதா தம்பி மீது மாணவி புகார்!
கல்விக்கு உதவி செய்துவிட்டு தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக பிரபல தாதா சோட்டா ராஜன் தம்பி மீது, மாணவி ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.
மும்பையின் பிரபல தாதா, சோட்டா ராஜன். செம்பூர் பகுதியில் வசித்து வந்த இவர், தாவூத் இப்ராகிமின் எதிரி. இப்போது சோட்டா ராஜன் சிறையில் இருக்கிறார். இந்நிலையில் செம்பூர் புறநகர் பகுதியில் வசிக்கும் மாணவி ஒருவர், கல்வி உதவித் தொகைக்காக, ராஜனின் தம்பி தீபக்கை சந்தித்துள்ளார். அவரும் உதவி செய்துள்ளார். பிறகு அந்த மாணவி மீது அவருக்கு ஆசை ஏற்பட்டதாகத் தெரிகிறது.
அவரை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைக் கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் திருமணம் செய்துகொள்ள மறுத்து வந்தாராம். இதையடுத்து மாணவி போலீசில் புகார் கொடுத்தார். அவர் புகாரை தீபக் வசிக்கும் செம்பூர், திலக் நகர் போலீஸ் ஸ்டேஷனில் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் மாணவி கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அவர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.