சென்னை | பெண்ணின் தலையில் கல்லை போட்டு கொலை – மாநகராட்சி ஓட்டுநர் கைது
செய்தியாளர்: சாந்த குமார்
சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் அருள் நகரை சேர்ந்தவர் பாக்யலட்சுமி (33), கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் இவர், தாம்பரம் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநராக பணிபுரியும் ஞானசித்தன் (40), என்பவருடன் பழகி வந்துள்ளார். இந்நிலையில் வேறொரு ஆணுடன் பாக்யலட்சுமி தொடர்பில் இருப்பது ஞானசித்தனுக்கு தெரியவந்துள்ளது.
இதையடுத்து நேற்று இரவு பாக்யலட்சுமியிடம் இது குறித்து ஞானசித்தன் கேட்ட போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், பாக்யலட்சுமியை கடப்பா கல்லால் அடித்த ஞானசித்தன், தலையில் கல்லை போட்டுக் கொலை செய்து விட்டு சங்கர் நகர் காவல் நிலையம் சென்று சரணடைந்தார்.
இதைத் தொடர்ந்து சங்கர் நகர் போலீசார், நிகழ்விடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து கைதான ஞானசித்தன் மீது கொலை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.