சென்னை: பெண்ணிடம் 5.5 சவரன் தங்க நகையை பறித்து தலைமறைவாக இருந்த இருவர் கைது
இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் கழுத்திலிருந்து 5.5 சவரன் தங்க நகையை பறித்து தலைமறைவாக இருந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை சோழிங்கநல்லூர் கிராம நெடுஞ்சாலையில் வசித்து வருபவர் சதீஷ்குமார் (30). இவர் தனது மனைவி புவனேஸ்வரியுடன் (26), கடந்த மார்ச் 3ஆம் தேதி செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பினர். அப்போது தம்பதிகளை பல்சர் பைக்கில் பின்தொடர்ந்து வந்த இருவர் கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற புவனேஸ்வரியின் கழுத்தில் அணிந்திருந்த 5.5 சவரன் தங்க நகையை பறித்துச் சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட புவனேஸ்வரி புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆராய்ந்தபோது செயின் பறிப்பில் ஈடுபட்டவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை கொண்டு தி.நகரை சேர்ந்த 28 வயதான விக்கி (எ) விக்னேஷ், கண்ணகிநகர் பகுதியைச் சேர்ந்த 20 வயதான சந்தோஷ்குமார் என்பது தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்து 5.5 சவரன் தங்க செயினை பறிமுதல் செய்த செம்மஞ்சேரி போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் வாசிக்கலாம்: சென்னை: பானிபூரி கிழங்கில் புழு: வடமாநில இளைஞருக்கு அடி உதை

