சென்னை: ராணுவ வீரரின் செல்போனை பறிக்க முயன்றதாக 2 பேர் கைது
சென்னையில் ராணுவ வீரரிடம் செல்போன் மற்றும் பணத்தை பறித்த 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை புனித ஜார்ஜ் கோட்டை ராணுவ தலைமையகத்தில் ஜாஸ்பர் சிங் என்பவர் ராணுவ வீரராக பணிபுரிந்து வருகிறார். இவர், ராணுவ அணிவகுப்பு மைதானம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த இரண்டு மர்ம நபர்கள் ஜாஸ்பர் சிங்கிடமிருந்து செல்போன் மற்றும் பணத்தை பறித்து தப்ப முயன்றனர்.
இந்நிலையில், ஜாஸ்பர் சிங் கூச்சலிட அருகிலிருந்த ராணுவ வீரர்கள் தப்பி ஓட முயன்ற 2 நபர்களையும் மடக்கிப் பிடித்தனர். இதையடுத்து தகவலறிந்து அங்கு வந்த கோட்டை காவல் நிலைய போலீசார், பிடிபட்ட 2 நபர்களையும் கைது செய்து காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.
விசாரணையில், கண்ணகி நகரைச் சேர்ந்த முனிவேல் என்ற ஜில்லா, பரத் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடமிருந்து செல்போன், பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணைக்கு பின்னர் கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.